பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பூவை எஸ். ஆறுமுகம்

என் ஒரே மகன் அதிசயத்தை அடிக்காதீங்க. அவன் நல்லபையனுங்க!-அவனை நானே தானுங்க திருடச் சொன்னேன்!” என்று விம்மி வெடித்தாள் தாய்.

அதிசயம் பேயடி பட்டவனாக அதிர்ந்தான். “ஐயா! எங்க அம்மா சத்தியமானவங்க; தருமமானவங்க நீதியானவங்க, அன்பானவங்க. என்னைக் காப்பாத்துறதுக்காகவே, பழியை அவங்க சுமந்துக்கிட்டு என்னைக் காப்பாற்ற வேண்டி, அவங்க உங்க முன்னிலையிலே குற்றவாளி ஆகப் பார்க்கிறாங்க, ஐயா!” என்று கதறினான்.

ராமையா திடுக்கிட்டார்! அதுவரை நல்ல பெயர் எடுத்திருந்த அருமைப் பிள்ளையின் கெளரவத்தையும் மானத்தையும் காக்கவே அதிசயத்தைப் பெற்ற அன்புத்தாய் தானே பழிகாரியாகப் பொய்க்கோலம் ஏந்த நேர்ந்த விதி அவருக்குப் புரியாமல் இருக்குமா? ராமையாவின் கண்கள் மனிதத் தன்மையில் கசிந்தன. கண்ணிர் வழிந்தது! ராமையாவை இழுத்து தன் நெஞ்சோடு அன்புடன் அணைத்துக் கொண்டார்.

அதிசயம் தன் நிஜார்ப் பையிலிருந்த மீதப் பணம் பத்தொன்பது ரூபாயை ராமையாவிடம் அழுது கொண்டே நீட்டினான், பாக்கி ரூபாயை அன்றாடக் கூலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக் கொள்ளும்படியும் கெஞ்சினான் சிறுவன்.