பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பூவை எஸ். ஆறுமுகம்


சோழநாட்டின் தலைமையான முக்கூடல் அது. அங்கு பறைஒலி விண்ணைச் சாடியது:

“இதனால் சோழதேசத்து மகாஜனங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நம் மன்னர் பிரான் அவர்களுடைய, மேன்மையான அரசாணைப் பிரகாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தினத்தில் மெய்க்காப்பாளர் தேர்தலுக்குப் போட்டியொன்று அரண்மனை அரசமண்டபத்தில் நடத்தப்படும். போட்டியில் திறமையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்......!”

அது காவேரிக் கரையின் ஒரம். அங்கு சிறுகச் சிறுக கும்பல் சேர்ந்தது. அன்றுதான் ஞாயிற்றுக்கிழமை. சோழவள நாட்டின் அரசமெய்க்காப்பாளர் போட்டித் தேர்வு நாள் அன்றல்லவா?

லிங்கன், வேலன், கந்தன் மூவரும் அப்பகுதியில் நல்ல பலசாலிகள் என்று பெயர். மூவரும் அப்பொழுது விதவிதமான ஆடையலங்காரத்துடன் தோன்றினார்கள். போட்டியில் வெற்றி யாருக்குக் கிட்டுமோ என்ற பீதி அவர்களின் முகமண்டலங்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“மெய்க்காப்பாளன் பதவி எனக்குத்தான்!” என்றான் ஒருவன்; இரண்டாமவன் தனக்குத்தான் என்று முழங்கினான்; மூன்றாவது ஆள் தனக்கே உரியது பதவி என்று முரசு கொட்டினான்.