பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பூவை எஸ். ஆறுமுகம்


ணத்தை உணர்ந்தறிந்து கொள்ளாமல் ஊர் மக்கள் இருக்கிறார்களே?-இவ்வாறு மனம் வருந்தினான் அவன்!-வீட்டுக்கு ஓடிப்போய்த் தன் தந்தை, ஆதியப்ப அம்பலத்தைக் கையோடு அழைத்து வர எண்ணினான்-- “பொழுது விடிஞ்சு பொழுது போனால், காடு கரையிலேயும் வயல் வரப்பிலேயும் உழைச்சுப் பிழைக்கிறதுக்கே பொழுது சரியாயிடுதே! இந்த அவலக் கேட்டிலே, சாகப்போற. காலத்திலே படிப்பு ஒண்ணுதான் குறைச்சலோ?” என்று சிலர் வயிற்றெரிச்சலோடு கூவினார்கள்.

காந்திராமனின் கண்கள் கலங்கிக் கசியத் தொடங்கின. “ஐயாமார்களே! உழைச்சுப் பிழைக்கிறது நம்முடைய வீட்டுக் கடமை உழைச்சால் நம் வீடு விளங்கும்! படிச்சால் நம் நாடு விளங்கும். எழுத்தறிவை நீங்கள் பெற்றால்தான், உங்களுடைய வீடு விளங்குவதோடு, நாடும் சிறப்புற விளங்க முடியும்! நீங்கள் உழைக்கிறீர்கள்; உண்மை தான்! உழைப்பதிலேயே காலம் சரியாகிவிடுகிறது: அதுவும் உண்மைதான் அலுப்பு மேலிட்டாலும் கூட, அன்றாடம் நீங்கள் எல்லோரும் சாப்பிடாமல் உறங்கிவிடுவீர்களா? இல்லையே? அது போலவே தான், உடலுக்கு உணவு மாதிரி உள்ளத்துக்கு அறிவு தேவைப்படும் தானே! இவ்வாறு காந்திராமன் கூட்டத்தில் நடந்தபடி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிக் கூட்டத்தினரை நோக்கிக் கையெடுத்துக்கும்பிட்டான்!

கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.