பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

79


பூங்கோதையும் அவர்களுடைய நியாயமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாள். மேலும்: “ஆறுவது சினம்” என்ற ஆத்திசூடிப் பாட்டை அவள் முதல் வகுப்பிலேயே படித்திருந்தாள். ஒளவைப் பாட்டி சொன்ன வாக்கை எச்சரிக்கையாகக் கொண்டு, கோபத்தை ஆற்றி வந்தாள். எப்போதாவது அம்மா தன் மீது கோபப்பட்டால் மாத்திரம், சிறுமிபூங்கோதை பதிலுக்கு அம்மாபேரில் கோபப்படுவது உண்டு. ஆனால், சமயசஞ்சீவியாக ஆத்திசூடிப் பாடல் ஞாபகத்துக்கு வரும் அம்மாவும் அந்தப் பாட்டை ஒப்புவிப்பாள். மகளும் அதே பாடலைத் திருப்பிச் சொல்லுவாள். ஆக, “ஆறுவது சினம்” என்ற அந்தப் போதனைப் பாட்டு இரு தரப்பிலும் உயர்ந்து, அமைதியை நிலை நாட்டிவிடும்.

ஆனால், இந்த டாக்டர் அப்பா மட்டும் கோபத்தை அடக்காமல் இருக்கிறாரே என்று பிஞ்சு மனம் வெகுவாக வருந்தத் தொடங்கியது!

ஒருநாள் அப்பாவிடம், அப்பா, “அப்பா! ஒளவை மூதாட்டி ஆறுவது சினம்னு தானே பாடினாங்க? ‘சினம் விலக்கேல்’-அப்படின்னும் பாடலிங்களே!” என்று ஒரு கேள்வியை மெதுவான குரலில் கேட்டாள்.

டாக்டர் ரங்கசாமி லேசாகச் சிரித்துவிட்டார். “ஊஹூம் இல்லை! நீ போய் வேறு பாட்டைப்படி அம்மா” என்று கூடத்துக்கு மகளை அனுப்பி-