பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

81

போயிருப்பாங்களோ, என்னவோ?” என்று ஒரு சந்தேகத்தை வெளியிட்டார்.

டாக்டருக்கு அப்போதுதான் தன் தவறு புரிந்தது. எம். பி. பி. எஸ். படிப்பின் போது, நோயாளிகளிடம் டாக்டர்கள் நடந்து கொள்ள வேண்டிய அன்பான அமைதியான முறைகளைப் பற்றி அடிக்கடி பாடம் போதித்துக் கொடுத்த நிகழ்ச்சிகளை அவர் நினைவு கூர்ந்தார். “இனி நான் புது மனிதனாக மாறவேண்டும். நோயாளிகளிடம் இனிகோபப் படவே மாட்டேன்!”

டாக்டர் ரங்கசாமி இவ்வாறு வாய்விட்டு பலத்த குரலில் பேசிவிட்டார்.

அருகில் மகள் பூங்கோதை நின்ற ரகசியத்தை அப்போதுதான் அவர் உணரலானார்.

உடனே, சிறுமி பூங்கோதை மகிழ்வுடன் குதித்தாள். “அப்பா, அப்பா!...பேஷ், பேஷ்!... நீங்க திருந்திட்டீங்க!...இனி எங்க அப்பா கோபப்படவே மாட்டாங்க! ஒளவைப் பாட்டியோட பாட்டுக்கு இவ்வளவு மகத்துவம் இருக்குதே?.” என்று குதுாகலத்தோடு சொல்லி, வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள் அவள்.

டாக்டருக்கு வாயெல்லாம் பல் ஆகிவிட்டது. அதாவது, வாய்விட்டுச் சிரித்தார்!