பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பூவை எஸ். ஆறுமுகம்

“கண்டாயா, என்னுடைய மகிமையை? என்னுடைய அழகின் ஒளியைப் பார்த்தாயா? நீயும் தான் இருக்கிறாயே. கொஞ்சம்கூட வெளிச்சம் தெரியாமல்-உன் இருப்பிடத்தைக் காட்டக்கூட வகையற்று!...ப்பூ!...” என்று மத்தாப்பு எக்காளமிட்டுச் சிரித்தபடி, அகலைக் கேலி செய்தது.

சிறுவர்-சிறுமியர் செய்த ஏளனம் போதாதென்று, மத்தாப்பூவும் கேலி செய்தது அகல் விளக்கின் துயரத்தைப் பன்மடங்காக்கிற்று. அதன் கண்கள் கலங்கின. ஆனாலும், அது பெரு மூச்சை மட்டும் வெளியேற்றிவிட்டு, ‘உம்’ மென்று பொறுமை பூண்டு இருந்தது. தன்னுடைய அடங்கிய-அளவான-மங்கிய ஒளியை தனக்குத் தானே ஒருமுறை நோக்கிக் கொண்டது. பின்னர், நமட்டுச் சிரிப்பொன்றைச் சிரித்துக் கொண்டது---ஆமாம், தனக்குள்ளேதான்!

அடுத்த கணம், என்ன நடந்தது, தெரியுமா?

கூத்தும் கும்மாளமும் அடங்கின.

சிரிப்பும் விளையாட்டும் நின்றன.

ஏனென்று இன்னுமா உங்களுக்கு விளங்க வில்லை?

சரிதான் போங்கள்! அடடே, போய் விடாதீர்கள்:

பாக்கிக் கதையைக் கேளுங்கள்!