பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலா வந்த பெருமான்


உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டு இறைவன் குணம் குறி கடந்த நிலையை நீத்து உருவமும் பெயரும் உடையவனாக எழுந்தருளுகிறான். எந்தக் காலத்திலும் தன்னை வந்து வழிபடுகிறவர்களுக்குப் பயன் தரும் பொருட்டு அங்கங்கே ஆலயங்களில் மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கிறான்.

பழங் காலம் முதற்கொண்டே கோயில்களில் பூசை முதலியன நடந்து வருகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய் எம்பெருமானுடைய தரிசனத்தைக் கண்டு மன அமைதியை அடைகிறார்கள். உலகியல்பிலே ஈடுபட்டு அதனால் உண்டாகின்ற கவலைகளே மறப்பதற்கு இறை வனுடைய நினைவு கொள்வதைத் தவிர, வேறு போக்கு இல்லை. எத்தனைக் கெத்தனை மனிதன் கல்வி, செல்வம், ஆற்றல் முதலியவைகளால் சிறந்து இருக்கின்றானோ, அத்தனைக் கத்தனை அவனுக்குக் கவலைகளும் துன்பங்களும் உண்டாகின்றன. புற வாழ்வில் விரிவு அடைய அடைய அவனுடைய துன்பங்களும் விரிவடைகின்றன. ஆனால் அகவாழ்விலே அவன் ஆழமாகப் புகப்புக அமைதி உண்டாகும். அகவாழ்வில் புகுவதற்குரிய வழி என்ன என்பதைப் பல காலமாகப் பெரியோர்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள்.

பாரத நாட்டில் இறைவனுடைய நினைவு பெற்று அவன்பால் பக்தி கொள்வதே அகவாழ்வு என்பதை அறிந்து கொண்டார்கள். மனத்தைப் புறத்தே செலுத்திச் செலுத்தி எல்லையில்லாத ஆசைகளுக்கு உட்பட்டு அவற்றால் வரும் துன்பங்களை அடைந்து அடைந்து, இந்தப் புற