பக்கம்:ஓங்குக உலகம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞரும் ஆவர்

103


சானகி சிவராமன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘ஐயா! சேஷா உங்களோடு பேசவேண்டுமாம்,’ என்றார்கள். எதற்கோ என்ற வியப்போடும் அச்சத்தோடும் சொல்லுங்கள் என்றேன்-ஒன்றை இங்கே சொல்லவேண்டும் ‘சேஷா’ (சேச்சா) என்பது குடும்பத்தார் அவரை அழைக்கும் செல்லப் பெயர். அவர் குடும்பத்தைச் சேர்ந்தோருக்கும் என் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே அது தெரியும். முதலில் அது விளங்க வில்லை. பின் நானே விளக்கினேன். அந்த ஆதிசேடன் உலகைத் தாங்குவது போன்று இன்று இவ்வுலகை இவர் தாங்குவதால் இச் சேஷா என்று கூறுவது மிகவும் பொருந்தும் என்றேன்.

தொலைபேசியில் என்னைக் கூப்பிட்ட இவர் ‘அ.மு.ப. ஐயாவா’ என விளித்து ஒரு பாட்டினைச் சொல்லி (இரண்டு அடிகள்) இது இன்னார் பாடியது தானே என்றார். நான் ‘ஆம்’ என்றேன். அதற்குப் பொருள் சொல்லிச் சரிதானே என்றார். ‘சரி! என்றேன். இதே கருத்தினையுடைய வேறு பாடல்கள் உள்ளனவா என்றார். நான் வேறு ஒருவர் பாடிய பாடலைச் சொல்லி விளக்கினேன். மிகவும் மகிழ்ந்தார். மற்றொருமுறை தொலைபேசியில் அழைத்து ஒரு பாடலைச் சொல்லி ‘இதற்கு இவ்வாறு பொருள் எழுதியிருக்கிறது. ஆனால் இவ்வாறு சொன்னால் சிறப்பாக இருக்குமல்லவா’ என்றார். நான் மலைத்தேன். உண்மையிலேயே அவர் கருத்து மிகச் சிறந்ததாக இருந்தது. மகிழ்ச்சியோடு அக்கருத்து மிகச் சிறந்தது என்றேன். அவர் தமிழ் வளர்த்த புரவலராக மட்டுமின்றித் தமிழ் உணர்த்தும் புலவராகவும் இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/106&oldid=1127610" இலிருந்து மீள்விக்கப்பட்டது