பக்கம்:ஓங்குக உலகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊர்ப் பெயர்களின் உருமாற்றம்

109


உருமாற்றி வழங்குவதறிகிறோம். பின் வந்தவர் எத்துணை மாற்றத்தைச் செய்யினும் ஒரு சில அடிப்படைப் பெயர்கள் நிலைகெடாது-தம் பண்டை மரபு கெடாவகையில் இன்றும் வாழ்கின்றன. தற்பெருமையாலும் பிற போற்றுதலாலும் வழங்கப்பெற்ற பெயர்களுள் பெரும்பாலானவற்றைக் காலத்தேவன் அழித்தும் சிதைத்தும் கெடுத்தும் பழைய பண்புகொள் பெயர்களையே வாழ வைக்கின்றான். ஒருசில பெயர்கள் மக்கள் பேச்சுவழக்கின் மருவால் மாற்றம் பெறுகின்றன. சில, சமய அடிப்படையிலும் நிலைகுலைகின்றன. சில, வெளிநாட்டவர்தம் ஆதிக்க வாடையின் காரணமாக மாற்றப்பெறுகின்றன. சில வேற்று மொழியாளர் தம் விருப்பத்தினால் வேறாக எண்ணுமாறு மொழிபெயர்க்கப் பெறுகின்றன. ஊர்ப்பெயர்கள் மட்டுமின்றி, மக்கள் பெயர்கள், அவர்தம் வாழ்வொடு கலந்த பிற பொருள்களின் பெயர்கள் அனைத்துமே மாற்றப்பெறுகின்றன. இந்த நிலை வளர்ந்துகொண்டே போகுமானால் தமிழ் மரபின் தன்மை. நிலை கெடுவதோடு அம்மரபின் அடிப்படையே இல்லை என்ற ஒரு நிலை உண்டாயினும் உண்டாகலாம். எனவே அத்தகைய அவல நிலைக்குச் செல்லுமுன் இம்மாற்றங்களை எண்ணி, மரபு கெடாத நல்ல நிலையை மறுபடி நிலைநாட்ட அனைவரும் முற்பட வேண்டும்.

ஊர்ப்பெயர்கள் பல வகைகளில் மாறுபடுகின்றன என்று கண்டோம். அவற்றுள் பெரும்பான்மையாக உள்ள ஒரு சிலவற்றை இங்கே எண்ணி அமைவோம்.

தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள் ஆதலினாலே, தாம் வாழ்ந்த ஊர்களுக்கு அவ்வியற்கையின் அடிப்படையிலேயே பெயரிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/112&oldid=1127624" இலிருந்து மீள்விக்கப்பட்டது