பக்கம்:ஓங்குக உலகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ஓங்குக உலகம்


பசிய வாழைகள் சூழ்ந்த சோழநாட்டு ஊர் ஒன்றற்குப் ‘பைஞ்ஞீலி’ என்றே பெயரிட்டார்கள். ஆயினும் அது கால வெள்ளத்தில் உருமாறி ‘பங்கிலி’ அல்லது ‘பங்கிளி’ என இன்று வழங்குகின்றது. அப்படியே அழகார் பசுமையான சோலை சூழ்ந்த பாண்டிய நாட்டு ஊர் ஒன்றற்குப் ‘பைம்பொழில்’ என்றே பெயரிட்டார்கள். அதுவும் சிதைந்து ‘பம்புளி’ என வழங்குகின்றது. தஞ்சை நாட்டில் சிறந்த ஆடையாகிய கூறை நெய்தளிக்கும் கூறை நாடு இன்று, ‘கொரநாடு’ என அழைக்கப் பெறுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் அதிகமான் அரசோச்சிய ஊர் ஒன்று உண்டு. அது இதுவரை ‘அதமன் கோட்டை’ என வழங்கப்பெற்று, இன்றைய ஆட்சியாளர் கண்ணில் பட்டுத் தற்போது ‘அதிகமான் கோட்டை’யாக மாறியுள்ளது. அவ்வூரை அடுத்த ‘லக்கிரிப்பேட்டை’ என்ற ஊர் அவ்வாறு அழைக்கப்பெற நேர்ந்த காரணத்தை ஆராய்ந்தபொழுதுதான் அதன் உண்மை விளங்கிற்று. அது ஒளவை வாழ்ந்து இலக்கியம் ஆய்ந்த இடம் என்றும் அதன் இயல்பான பெயர் ‘இலக்கியப் பட்டி’ என்றும் அறியும்போது மகிழ்ச்சி பிறக்கிறது. அதற்குப் பக்கத்திலே, ஒளவை சென்ற ‘ஒளவை வழி’ என்ற ஊரும் இருக்கிறது. ‘மரூஉ’ என்பது இலக்கண மாய், மரபில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனினும் அதனால், அடிப்படை நிலை கெடலாகாது. இவ்வாறு மருவி வழங்கும் பெயர்கள் காலத்தால் உருமாறிச் சிதைந்து விடாதபடி இயல்பான காரணத்தோடு அமைந்த பெயர்களைக் கட்டிக் காத்தல் தமிழர் கடன். இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பெயர்கள் நாட்டில் உருமாறியுள்ளன.

பெருமன்னர்கள் தம் ஆற்றலும் வீரமும் கருதிச் சில ஊர்களுக்குப் பெயரிட்டு உள்ளார்கள். அவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/113&oldid=1127626" இலிருந்து மீள்விக்கப்பட்டது