பக்கம்:ஓங்குக உலகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊர்ப் பெயர்களின் உருமாற்றம்

111


சிதைந்தும் மாறியும் நிலைகெட்டும் உள்ளன. பல்லவப் பெருமன்னன் ‘மாமல்லன்’தன் பெயர் கொண்டு அமைந்த மாமல்லபுரம் இன்று ‘மகாபலிபுர’மாகி, மாபலிச் சக்கரவர்த்தியோடு தொடர்புபடுத்தப்பெற்று அதற்கெனக் கதைகளையும் ஆக்கிக்கொண்டது. அங்கமைந்த ஏழு கோயில்களைக் கண்ட மேலைநாட்டார் அதை ஏழு கோயில் என்றே அழைத்தனர் (Seven Pagodas). அவ்வாறே தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ‘வீரநாராயணன் ஏரி’, ‘வீராணத்தேரி’ என மருவி வந்துள்ளது.

இவ்வாறு தம் புகழ் நாட்ட அமைத்த ஊர்ப் பெயர்கள் உருமாறிய நிலை ஒருபுறம் இருக்க, இயல்பாக அமைந்த சில தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களைச் சில அரசர்கள், தங்கள் புகழ் நாட்டும் நிலைக்களன்களாகக் கொண்டு, தங்கள் வெற்றியைக் குறிக்கும் ஊர்களாக எண்ணி, அவற்றை மாற்றி அமைத்தனர். எனினும் அறிவுடைய தமிழ்ச் சமூகம் தற்பெருமையால் அமைந்த அப்பெயர்களைத் தள்ளி, அவ்வூர்களின் இயற்பெயர்களையே வாழ வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று-சிறந்த ‘பழநி’ என்னும் ‘பொதிநி’யாகும். ஆவியர் குடிமகன் ஆண்டதால், அக்குடிப் பெருமையை நிலைநாட்ட, அம்மரபின் வழி வந்தவர், அப்பெருந்தெய்வப் பேரூருக்குத் தம் மரபின் வழியில் ‘ஆவிநன்குடி’ என்றே பெயரிட்டனர்; அவ்வாறே புலவர் பெருமான் நக்கீரரையும் பாடவைத்தனர். எனினும் தமிழர் இன்று அதைப் ‘பழநி’ என்று அதன் பழம் பெயராலேயே அழைக்கின்றனர். அப்படியே இடைக்காலத்தில் வாழ்ந்த சோழ, பாண்டிய மன்னர்கள் தம் விருதுப் பெயர்களால் பல ஊர்களின் இயற்பெயர்களைச் சிதைத்துப் புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/114&oldid=1127629" இலிருந்து மீள்விக்கப்பட்டது