பக்கம்:ஓங்குக உலகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊர்ப் பெயர்களின் உருமாற்றம்

115


எங்கோ ஒரு சிலவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான தம் பழம் பெயர்களாலேயே அழைக்கப் பெறுகின்றன. எனினும் மாறிய மற்றவையும் திருந்திய தமிழ்ப் பெயர்களாக ஆக்கும் பொறுப்பு தமிழ் மக்களுடையதாகும்.

தமிழ் நாட்டில் தற்போது மற்றொரு வகையான மாற்றம் ஊர்ப்பெயர்களில் காண்கிறோம். பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு வாணிபத்தைத் தொடங்குபவர்கள் தத்தம் பெயரால் ஊர்களை அமைத்துக் கொள்ளுகின்றனர். ‘டால்மியா புரம்’, ‘அசோக் நகர்’ போன்றவை ஒரு சில. இன்னும் இன்று நாட்டில் வாழ்ந்த-வாழ்கின்ற-தலைவர்கள் பெயர்களால் எத்தனையோ ஊர்களும் தெருக்களும் அமைக்கப் பெறுகின்றன. பல பழைய ஊர்களும் தெருக்களும் இவ்வாறு அவ்வக் காலத்தில் வாழும் தத்தம் தலைவர்களுக்காகப் பெயர்மாற்றம் பெறுகின்றன. சென்னையில் இருக்கும் ‘சைனா பஜார்’ எனும் சீனக் கடைத்தெருவைச் ‘சுபாஷ் சந்திரபோஸ்’ பெயரால் மாற்றினார்கள். இம்மாற்றம் செய்து ஆண்டுகள் பலவாயினும் மக்கள் அதைப் பழைய பெயராலேயே அழைப்பதைக் காண்கிறோம்; சில ஆங்கிலப் பெயர்கள் வழக்கில் மாற்றம் பெற்றுச் சிதைந்துள்ளமைக்கு ‘ஹாமில்டன் பாலம்’ ஒரு சான்று. இவ்வாறு தனிமனிதர்களின் நினைவாக ஆக்கப் பெறும் எந்தப் .ெபயரும் எத்தனை நாள் நிலைத்து வாழும் என்ற உண்மையைக் கணக்கிடும் திறன் காலத் தேவனுக்கே உண்டு. நான் முதலிலே கூறியபடி, தமிழ்மக்கள் இயற்கையோடியைந்த வாழ்வு நடத்துபவராகையால், அந்த இயற்கை நியதிக்கும் வாழ்வுக்கும் மாறுபட்ட வகையில் அமையும் எதுவும் காலப்போக்கில் அவர்களால் நீக்கப்பெறும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/118&oldid=1127784" இலிருந்து மீள்விக்கப்பட்டது