பக்கம்:ஓங்குக உலகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஓங்குக உலகம்


மொழி வழியில் அந்த நிலையினை நாட்டு நிகழ்ச்சி இன்று நமக்குக் காட்டுகின்றது. ஊர்ப்பெயர்களை வாழ வைப்பதிலும் அந்த உணர்வு உள்ளமையை, முன்னர் சுட்டிக் காட்டினேன். இவ்வூர்ப்பெயர்களுள் பலப்பல இன்னும் திருத்தம் பெற வேண்டியுள்ளன. எதிர்காலத்தில் அவை திருத்தம் பெறலாம் என்ற நம்பிக்கை உண்டு.

ஊர்ப்பெயர்கள் மட்டுமன்றி, மக்கட்பெயர், உணவு - வகைகளின் பெயர்கள், ஊர்திகளின் பெயர்கள் இன்னும் வாழ்வின் தேவைப் பொருள்களின் பெயர்கள் இவற்றிலெல்லாம் உருமாற்றங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் இன்று உலக நாகரிகங்களின் எல்லாச் சாயல்களும் உள்ளன. எல்லா மொழிகளின் வாடைகளும் உள்ளன. எல்லாச் சமயங்களின் தெளிவுகளும் உள்ளன. எனவே பல மாற்றங்கள் இருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய மாற்றங்கள் ஒரு வகையில் வரவேற்கத்தக்கனவேயாயினும், முதல் நிலையின் மரபு கெடாத வகையில், வந்தவை இணைந்து இந்த நாட்டுப் பண்பாட்டுடன் பிற இயல்புகளும் சிறந்தோங்கும் வகையில் அமையவேண்டும்-நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

“வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

எனத் தொல்காப்பியர் மொழி அமைப்புக்குச் சொன்ன இலக்கண மரபு, வாழ்வில் எல்லா அடிப்படை நிலைகளுக்கும் பொருந்தும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்ற பண்பாட்டில் தலைநின்ற தமிழன் யாரையும் எதையும் வெறுப்பவனல்லன். ஆனால் மற்றவை அவன் மேல் வீழ்ந்து அவன் அடிப்படை வாழ்வினையே சாடும்போது விழித்து நிமிர்ந்து நின்று உண்மையை வாழ வைப்பான். அப்பண்பாட்டின் ஒரு துளியே பல மாற்றங்களுக்கு இடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/119&oldid=1135828" இலிருந்து மீள்விக்கப்பட்டது