பக்கம்:ஓங்குக உலகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு கட்டி விடாதீர்கள்

119


ஆய்வினை விட்டு அறிதோ றறியாமை காணும் உண்மையினைச் சற்றே எண்ணிப் பார்ப்போம்.

கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் பயிலும் சிறுவனுக்குத் தான் அங்குள்ள உயர் வகுப்பாகிய ஐந்தாம் வகுப்பில் பயிலும்போது, தானே உயர்ந்தவன் என்ற உணர்வும், பிற வகுப்புக்களில் பயில்பவரைக்காட்டிலும் தனக்கே அதிகம் தெரியும் என்ற தருக்கும் உண்டாகும். அவனே பின் அண்மையிலுள்ள நகர உயர்நிலைப் பள்ளி நடத்திய தேர்வில் முதலாம் படிவத்துக்கும் தகுதியற்று, அதே ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது மேலே உள்ள ஆறு வகுப்புக்களையும் எண்ணி அறியாமையை உணர்வான். அப்படியே பள்ளியிறுதி வகுப்பில் வரும் போது, தானே எல்லாவற்றையும் அறிந்தவனாகத் தருக்கும் மாணவன் கல்லூரியில் கால் வைக்கும்போது கருத்தழிவான். கல்லூரிக் கல்வியில் முதலிடம் பெற்றுத் தேறினும் வாழ்வெனும் பள்ளியில் கால் வைக்கும்போது அவனது அறியாமையை எண்ணி அவன் வாடுவான். இதுவே முறையான வாழ்வமைப்பு. இம்முறை எல்லாவற்றிற்கும் பொருந்தும். சிறப்பாக இன்றைய அறிவியல் ஆய்வாளர்களுக்கு இவ்வுண்மை முற்றும் பொருந்துவதாகும். அறிய அறிய-உணர உணர்-தாம் அதிகம் உணர்ந்தவர் என்றோ-முற்றும் உணர்ந்தவர் என்றோ தம்மை அதிகமாக மதிப்பிட்டு எண்ணுவது நல்ல ஆய்வாளர்கட்கு ஏற்ற ஒரு செயலன்று. அண்ட கோளங்களையும் பேரண்டப் பெருவெளியையும் தாம் அளந்து விட்டதாகவும் எண்ணும்வகையில் அண்மையில் சில விஞ்ஞானிகள் தம் கருத்தை வெளியிட்டதாகச் சில தாள்களில் படிக்கும்போது நான் உண்மையிலேயே வருந்தினேன். பாவம்! இவர்கள் அறியாதவர்கள்-ஆம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/122&oldid=1127671" இலிருந்து மீள்விக்கப்பட்டது