பக்கம்:ஓங்குக உலகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு கட்டி விடாதீர்கள்

121


அத்தனைவேற்றுமை-—பருமை—இன்று ஆய்வுவழி கண்ட அண்டப் பகுதிக்கும் காணாத பெரும்பகுதிக்கும் உண்டு என்று கூறலாம். இது நான் கூறும் உவமை. இதனினும் நுண்ணிய உவமையைப் பெரியவர் கூறியுள்ளனர். அதையும் பின் காணலாம். இவ்வுண்மைகளையெல்லாம் எவ்வாறோ எண்ணி-அல்லது உணர்ந்து-ஓரளவு நம் தமிழ்நாட்டுப் பழம்பெரு நல்லவர்கள் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளார்கள்.

வானத்தில் எத்தனையோ ஒளிப்பொருள்கள் உருண்டுகொண்டே இருக்கின்றன. அவற்றின் வளர்ச்சி பற்றியும் தோற்றம், நிலைபேறு, மாற்றம் முதலியன பற்றியும் ஆராய்ந்துகொண்டே உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்திகளால் உணர்த்தப்பெற்ற ‘பொருள்கள் அழிவன அல்ல, நிலைமாறும் தன்மையன’ என்ற உண்மையை இன்று விஞ்ஞானிகள் உணர்ந்து உணர்த்துகின்றனர். இவ்வாறு நிலைமாறும் பொருள்களை வானவீதியில் வலம் வந்து கணக்கிடும்போது பலப்பல புது உண்மைகள் புலனாகலாம். எனினும் இன்று அல்லது நாளைப் பொழுதில் ஏன்-என்றுமே இவற்றின் எல்லையை யாராலும் கணக்கிட முடியாது. அல்லது இவற்றின் தோற்ற மாறுபாடுகள் ஏன் இவ்வாறு நிகழ்கின்றன எனக் காட்டமுடியாது. அவற்றை ஒருவேளை சமய உணர்வு காட்ட முயன்று பயன் பெறலாம். இந்த உண்மையைத்தான் சிறந்த விஞ்ஞான மேதையாகிய ‘ஐயின்ஸ்டைன்’ இந்த அண்ட கோள விந்தைகளை ஆராயும்போது ‘இவை எப்படி உண்டாகின்றன என்று என்னால் கூறமுடியும்; ஆனால் ஏன் உண்டாகின்றன என்ற கேள்விக்கு விடை காண முடியாது’ என்று கூறியதாக அறிஞர் விளக்குவர். ஆம், இந்த வினாவுக்குச் சமயமே விடை காண வல்லது.

ஓ.—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/124&oldid=1127788" இலிருந்து மீள்விக்கப்பட்டது