பக்கம்:ஓங்குக உலகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

ஓங்குக உலகம்


அடிப்படைத் தன்மையும் உருவாக்கும் நடைமுறையும் மாறாதுள்ளன. கிறித்துப் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மக்கள், கந்தைகளைப் பொடி செய்து நீரில் கலக்கி அதன்வழியே காகிதம் செய்யும் கலையை அறிந்திருந்தனர். கந்தைகளிலிருந்து, நார்ப் பொருளை நீரொடு கலக்கி, அந் நீரினை அரித்து வடித்து, மெல்லிய தாளினை உருவாக்கும் திறனை, எதிர்பாராத வகையில் அவர்கள் கற்றிருக்கக் கூடும் எனக் கருதலாம்.

காகிதம் செய்யும் கலை சீன நாட்டில் தோன்றிய தென்பதனை மேலைநாட்டு அறிஞர்கள் சில வேளைகளில் ஐயுறுகின்றனர். ‘பேப்பரஸ்’ என்ற பெயரிலிருந்து ‘பேப்பர்’ என்ற பெயர் வந்திருக்க வேண்டும் எனக் கருதுவதும் சீனத்தாளின் இயற்கை நிலையை அவர்களே அறியாதிருப்பதும் அதற்குக் காரணங்களாகலாம். தாளுக்கு முந்திப் பயன்படுத்தப் பெற்ற ‘பேப்பரஸ்’ என்னும் பெர்ருள் ஒருவகை நாணற்புல் தண்டிலிருந்து துண்டாக்கி விரிக்கப்பெற்றதாக அமைய, காகிதமோ நார்க் குழம்பிலிருந்து உண்டாகியது என்பதை அவர்கள் உணரவில்லை. (‘பேப்பரஸ்’ என்ற சொற்கு நாணற் புல்வகை என்பதே பொருள்) துணியில் எழுதப்பெற்று, அதனினும் சிக்கனத்தைக் கையாளும் வகையிலே பின் வளர்ச்சியடைந்த ஒன்றே தாளின் தோற்ற நிலை என்பது தேற்றம். தாளும் துணியும் ஒன்றோடொன்று நெருங்கிப் பின்னியவை. அவை இரண்டும் ஒரே வகையான மூலப் பொருள்களினால் ஆக்கப்பெறுவதோடன்றி, புற அமைப்பினும் பொருள் செறிவிலும் ஒரே தன்மை உடையனவாகவும் உள்ளன. அவற்றை ஆக்கும் செயல் முறையிலும் அதன் வழி அமையும் மதிப்பின் தரத்திலும் உள்ள வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகளே முக்கியமான வேற்றுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/133&oldid=1127789" இலிருந்து மீள்விக்கப்பட்டது