பக்கம்:ஓங்குக உலகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

ஓங்குக உலகம்


விளங்கியதென்பதைக் காட்டுகின்றன. இவ் வாசகங்கள் அச்சிடப்பெற்ற காலத்துக்கு நெடுநாட்களுக்கு முன்பே கொரியாவும் ஜப்பானும் சீனப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உட்பட்டமை உண்மையாதலால் இவ்வச்சுக் கலைத் திறன் சீன நாட்டிலிருந்தே புகுத்தப்பெற்றது என்பதில் ஐயமில்லை.

அக் காலத்துக்கு ஒத்ததான அச்சடித்த பொருள்கள் சீனத்தில் கிடைக்கவில்லை யாயினும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டின் அச்சுப் படிவங்களின் மாதிரிகள் கண்டு பிடிக்கப்பெற்று கி.பி. 848ல் அச்சிடப்பெற்றுத் தாள் சுருளில் உள்ள புகழ்பெற்றவை இன்றளவும் காப்பாற்றப் பெறுகின்றன. ‘வைரச் சூத்திரம்’ (Dimand formula) என்னும் முழுநூல், 877, 882 ஆம் ஆண்டுகளின் நாள் காட்டி (Calender), 947-983ல் வெளியான பல புத்தர் படங்களைக் கொண்ட தனித்தாள்கள், 957, 973ல் அச்சாகிய தோத்திரப் பாடல்களின் இரு பதிப்புக்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். இந்தப் பழைய அச்சுக்களின் மாதிரி அனைத்தும் புத்த சமயத் தொடர்புடையவையே. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ‘கன்பூஷியஸ்’ சமயமுறை பற்றிய நூல்கள் அச்சிடப் படவில்லை. அக் காலத்தொடு அரசியல் ஆணையர், தனியார், சமயத்தார் வணிகர் ஆகியோர் முயற்சியினால் இவ்வச்சுக்கலை தத்தம் தேவைக்கெனக் கொள்ளப்பெற்றுச் செம்மை செய்யப்பெற்று வளர்ச்சியுற்றது. ஐரோப்பிய நாட்டில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் அச்சிட்ட நூல்களோடு ஒப்பு நோக்கும்பொழுது பதினோராம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சீனத்து அச்சுப் படிகள், சிறந்த தாள், மை, எழுத்தமைப்பு, படங்கள், கை வண்ணத்திறன் போன்றவற்றிலும் வேறு சில சிறந்த தன்மைகளிலும் போற்றத் தக்கனவாக உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/139&oldid=1127856" இலிருந்து மீள்விக்கப்பட்டது