பக்கம்:ஓங்குக உலகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

ஓங்குக உலகம்


நோக்கி, கிட்கிந்தையை வந்து அடைகின்றனர். கிட்கிந்தையைத் தற்கால ‘அம்பி’யோடு பொருத்துவர். சூர்ப்பனகை நாசியாகிய மூக்கு அறுபட்ட இடமே நாசிக் ஆயிற்று என்பர். வாலி கொல்லப்பெற்ற இடம் தற்கால ‘ஆனகொந்தி’ என்ற இடமே என்பர். வாலி மேடு என்று அங்கே உள்ளது. சுக்கிரீவன் அரசனான பின் சீதையைத் தேட வானர வீரர்களை அனுப்புகிறான். அப்போது சுக்கிரீவன் தெற்கே சென்ற அனுமனையும் அவனைச் சார்ந்தவர்களையும் விளித்து, அவர்கள் செல்ல வேண்டிய வழியை விளக்குகிறான். இலங்கையில் சீதை இருப்பாள் என ஊகித்தமையின் அதற்குரிய வழியே அது. அந்த வழியில் ஆந்திர, தமிழ்நாட்டுத் தலங்களையும் பேரூர்களையும் சுட்டிக் காட்டிக்கொண்டே செல்லும் போது, தென்கோடியில் உள்ள பொதிய மலையும் குறிக்கப்பெறுகின்றது. ஆம், அதைக் குறிக்கும்போது தான் மறவாது சுக்கிரீவன் வாக்கில் கம்பர் அங்கே தமிழ் முனியாகிய அகத்தியன் சங்கம் அமைத்துத் தமிழை ஓம்புகிறான் என்றும், அவன் என்றும் அங்கே தங்கியுள்ளவனே அன்றி வேறு எங்கிருந்தும் வந்தவன் அல்லன் என்றும், தமிழ் நலம் சான்ற அம்முனிவன் வாழ்ந்து வரும் மலையில் தம் வானரத் தன்மையைக் காட்டாது வணங்கிச் செல்ல வேண்டும் என்றும் ஆணையிடுகின்றான். இது கம்பன் வாக்கு:

“தென்தமிழ்நாட் டகன்பொதியில் திருமுனிவன்
தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினால்
அம்மலையில் இறைஞ்சி ஏகி”

(நாடவிட்ட.31)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/153&oldid=1127800" இலிருந்து மீள்விக்கப்பட்டது