பக்கம்:ஓங்குக உலகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை அகத்தியர்?

151


அவ்வாறே அவ்வானரர் சென்று அனுமன் வழியே சீதை இலங்கையில் உள்ளதை அறிகின்றார் எனக் கதை செல்கின்றது.

பல்வேறு ஐயங்களுக்கு இடைப்பட்ட அகத்தியர் வரலாற்றை இவ்வாறு கம்பன் நன்கு தெளிவாகக் காட்டி விட்டான். தண்டக வனத்து விந்திய மலையைத் தம்பிக்கச்செய்த அகத்தியர் முனிவர்களுடன் கலந்து, வேதம் ஓதி ஆரிய மரபுப்படி தீ வளர்த்து வாழ்ந்து வந்தார் என்றும் அதே வேளையில் தென்கோடியில் பொதியமலைச் சாரலில் தமிழ் முனிவராகிய அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்து, புலவர்களுடன் இருந்து தமிழை ஆராய்ந்துவந்தார் என்றும் இருவரும் இருவேறு இடங்களிலும் நிலைத்து என்றும் வாழ்ந்தவர் என்றும் திட்டமாக விளக்கிக் காட்டிவிட்டான் கம்பன். எனவே, நாம் இருவரும் ஒருவரே என்றும் அவர் அங்கிருந்து இங்கோ, இங்கிருந்து அங்கோ சென்றார் என்றும் கொள்ளுதல் பொருந்தாது. பெயர் ஒற்றுமையால் உண்டாகும் இந்தத் தடுமாற்றத்தை விடுத்து, இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கொள்ளலே சாலும். பெயர் ஒற்றுமையால் நாட்டில் சாதாரண மாறாட்டங்கள் நடைபெறுவதை வாழ்வில் இன்றும் காண்கிறோம். காய்தல், உவத்தல் இன்றி ஆராய்ச்சி செய்த மேலை நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளரான ‘வின்ஸென்ட் ஸ்மித்’போன்றார் இக் கருத்தையே வலியுறுத்தியுள்ளமையையும் இங்கே நினைவூட்டுகின்றேன்.

இவ்வாறே பல சிக்கற் தீராப் பிரச்சினைகளை ஆராய்ந்து காண்பின் உண்மை உறுதியாகத் தோன்றும். அத் துறையில் ஆவன காண வேண்டும் என்று அறிஞர்களைக் கேட்டுக்கொண்டு அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/154&oldid=1127945" இலிருந்து மீள்விக்கப்பட்டது