பக்கம்:ஓங்குக உலகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

ஓங்குக உலகம்


என்ற மூன்றினை அடக்கி உள்ளனர். மூன்றும் எளிமையாக இளைஞரும் பிறரும் படித்து உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை அறிவோம். சிறு சிறு சொற்களால் அமைந்த ஆத்திசூடி, கொஞ்சும் மழலை மொழியில் பாப்பா பாட்டு, பின் சமுதாய எழுச்சி பெறத் தட்டி எழுப்பும் வகையில் முரசுப்பாட்டு. ஆம்! பண்டைத் தமிழ் மன்னர்கள் முரசறைந்து நாட்டில் அறத்தையும் பிற நிகழ்ச்சிகளையும் அறிவுறுத்திய மரபுப்படி நம் கவி அரசனும் முரசு கொண்டு, சமுதாய வாழ்வறத்தினை நமக்கு உணர்த்துகிறான். முரசின் தொடக்க நான்கு அடிகள் தனிப்பட்டன. பின்பே ஊருக்கு நல்லது சொல்லும் உபதேசம் தொடங்குகின்றது. முதல் நான்கு அடிகளிலும் இவ்வுலகை ஈன்ற அம்மை அப்பனை நினைவு கூறுமுகத்தான் அவர்தம் நிலைத்த வாழ்வினை நினைத்து அவர்கள் வாழ்த்த, மனித சமுதாயம் எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒன்றிய உணர்வில் வாழ ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்ட’ முரசு முழக்க வேண்டுமெனக்காட்டித் தம் நீதியினைத் தொடங்குகின்றான் பாரதி.

இந்த முரசுப்பாட்டில் பாரதி, மனித சமுதாயம்-சிறப்பாக இந்தியச்சமுதாயம் வாழ அடிப்படையானசாதி, சமய வேறுபாடற்ற வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நீதியினை விளக்கி, அறிவை வளர்த்து, அன்பில் திளைத்து அச் சமுதாயம் வாழ வேண்டும் என்ற நீதியினையே பலப்பல வகைகளில் பலப்பல ஏதுக்கள் காட்டி எடுத்து விளக்குகிறான். புதிய ஆத்திசூடி, பாப்பா பாட்டு ஆகியவற்றில் எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்லிய பல நீதிகளை எல்லாம் தொகுத்து, இங்கே நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், சாதியாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/165&oldid=1127973" இலிருந்து மீள்விக்கப்பட்டது