பக்கம்:ஓங்குக உலகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு நலமுற

15


சத்தியாக்கிரகம் செய்ததையும் அதே வேளையில் நடந்த தமிழ்நாட்டின் வேதாரணிய உப்பு யாத்திரையும் அவை மக்கள் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிகளையும் எண்ணினால் கண்ணீர் பெருகுகின்றது. அக்காலத்திலெல்லாம் மக்கள் இணைந்து செயலாற்றிய ஒரே நிறுவனம் காங்கிரஸ் என்பதை யாரும் மறுக்க இயலாது. ‘குமரியொடு வடஇமயத்து ஒருமொழி வைத்துலகாண்ட’ என்ற இளங்கோவடிகள் வாக்கு, அவர் காலத்துக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து மறுபடியும் நனவாயிற்று என்றால் அந்தப் பெருமை காங்கிரஸ் மகாசபையினையே சாரும். அந்த காங்கிரஸ் மகாசபையின் எழும்பூர் ஏரியில் 1927-28ல் நடைபெற்ற மாநாட்டுப் பந்தலில்-நான் மிக இளைஞனாக வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில பயின்ற நாளில்-நாடகம் நடித்ததை நினைத்துப் பார்க்கிறேன். பின் நடைபெற்ற ஆலடி காங்கிரஸ் மாநாட்டின் நிகழ்ச்சிகள் என் நினைவில் வருகின்றன, அப்படியே காஞ்சிபுரத்தில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டின் நிகழ்ச்சிகள் என் நினைவில் விருகின்றன. அப்போது காஞ்சிபுரத்தில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்த வரதராசலு நாயுடு, திரு.வி.க போன்றவர்கள் வாலாஜாபாத்துக்கும் வந்து, பள்ளிக்கூட்டத்தில் நான் சாதி ஒற்றுமையைப் பற்றிப் பேசியதைக் கேட்டதையும், தலைமை வகித்த டாக்டர் நாயுடு அவர்கள் தமக்கிட்ட மாலையினை எனக்கிட்டு என்னை வாழ்த்தியதையும் எண்ணிப் பார்க்கிறேன். இப்படி எத்தனை எத்தனையோ வகையில் பல பெரியவர்கள் நாடு முழுவதும் நம் மக்களைத் தட்டி எழுப்பி, ‘நம்மை நாம் உணரும்’ வகையில் உணர்வூட்டிய காரணத்தாலேயே காங்கிரஸ் தன்னிகரற்றுத் தலைநின்று நாட்டிற்கு நல்லதொரு விடுதலையை வாங்கித் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/18&oldid=1127544" இலிருந்து மீள்விக்கப்பட்டது