பக்கம்:ஓங்குக உலகம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரணியன் ஏன் வந்தான்?

181


அதற்குப் பதிலாக, இறைவன் பெயரைச் சொல்லி, அதனால் அவ்விருவர் மட்டுமன்றித் தரணியே பிழைத்து ஓங்கும் என்கிறான் பிரகலாதன்.

‘என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இளைய
உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதற்பொருள் மொழிவது மொழிந்தேன்’

எனக் கூறுகிறான். இதனால் தனக்கும் பிற யாவற்றிற்கும் மேலுள்ள இறைவன் பெயரே உலகை உய்விப்பது எனக் காட்டி, ‘யான், எனது’ என்ற தருக்கற்று வாழ வேண்டும் எனக் காட்டுகிறான்.

பின் இரணியன், ‘தானன்றி எவரே உலகு தந்தார்’ என்று தருக்கொடு கேட்ட வினாவிற்குப் பதிலாகப் பல பட உரைப்பதாக அநேக பாடல்களைக் கம்பர் பாடுவர். அவற்றுள் இறைவனின் அலகிலா விளையாட்டின் திறத்தினையும் யாண்டும் நீக்கமற நிறைந்து அங்கங்கே உள்ளனவற்றை வாழ வைக்கும் அருள் நலனையும் அவனைக் கண்டு தொழ வேண்டிய நிலையினையும் அதனால் உலகு பெறும் பயனையும் பிறவற்றையும் எடுத்துக் காட்டி, இரணியனைத் திருத்த நினைக்கின்றான். அவன் திருந்தவில்லை. அவற்றைக் கண்டு நாமாவது திருந்த முயல்வோமே!

‘உலகு தந்தானும் பல்வேறு உயிர்கள் தந்தானும் உள்ளுற்று
உலைவிலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின்றானும்
மலரில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும்
அலகில் பல்பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா’

என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/184&oldid=1135860" இலிருந்து மீள்விக்கப்பட்டது