பக்கம்:ஓங்குக உலகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஓங்குக உலகம்



கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகளார் உழவாரப்பணி செய்து சமூகநலம் காத்தவர். அக்காலை பெருமன்னனாகிய மகேந்திரன் அவரைத் துன்புறுத்திய காலத்தில் ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதும் இல்லை’ என்று வீறு பேசி, ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்பதை எடுத்துக்காட்டி, தன் கொள்கையை நிறுவி வெற்றி பெற்றார். ஆம்! அதே நிலையில் அதே வயதில் அண்ணல் காந்தியடிகளார் ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்று விண்முட்டப் பேசி வீறுகாட்டி வெற்றி பெற்றார். அத்தகைய அண்ணல் வழி நடந்த பாரத மக்களின் நெஞ்சை நினைத்த பாரதியார் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று பாட்டிசைத்தார். ஆக நம் நாட்டுப் பழம்பெரும் செம்மையும் தீயதற்கு அஞ்சா நெஞ்சுரமும் சமுதாயம் செழிக்கக் காணும் தொண்டும் மீண்டும் நாட்டில் நிலைக்கச் செய்த பெருமை தியாகத் தொண்டர்களாகிய அப் பெரியவர்களையே சாரும்.

‘இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டும்’ பதம்திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றும், எதற்கும் அஞ்சாது நிமிர்ந்துநின்று வெற்றிவாகை குடி, 1947-ல் அப் பெருமக்கள்-அண்ணலார் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய்படேல் தமிழ்நாட்டுத் தனிப் பெருந்தலைவர் காமராசர் போன்றோர்-நாட்டிற்குச், சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். அத்தகைய தியாகச் செம்மல்களுள் இன்றும் நம்முடன் மாண்புமிகு மீ. பக்தவச்சலம் போன்று இரண்டொருவர் வாழ்ந்து வருவது நம் மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. ‘நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ அல்லவா?

ஆம்! விடுதலை பெற்று நாற்பதாண்டுகள் ஆகப் போகின்றன. அந்தப் பெரியவர்களுடைய தியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/19&oldid=1127263" இலிருந்து மீள்விக்கப்பட்டது