பக்கம்:ஓங்குக உலகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு நலமுற

17


வாழ்வினையெல்லாம் அறியாத இளைய தலைமுறைகள் இப்போது வாழ்கின்றன. அவர்களுக்கெல்லாம் அந்தப் பெருந்தொண்டுகள்-தியாகங்கள்-செயல் திறன்கள்-செம்மை நலன்கள் தெரிய வழியில்லை. நாடு எத்தனையோ வகையில் வளர்கின்றது என்றாலும் மக்கள் உள்ளம் வளரவேண்டிய அளவில் வளரவில்லை; ஏன் சுருங்கி வருகிறதோ என்று எண்ணவும் தோன்றுகின்றது. ‘ஒன்றே நாடு-ஒன்றே உணர்வு-ஒன்றே குலம்-ஒருவனே தேவன்’ என்கின்ற நினைவும் நெறியும் மாறி, நாட்டில் சாதியால், சமயத்தால், நீதியால், நெறிமுறையால், செல்வத்தால், இன்ன பிறவற்றால் வேறுபாடுகள் வளர்ந்து சமுதாயத்தின் செம்மை வாழ்வு சிதையுமோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது. நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் காங்கிரஸ் மகாசபை அந்த அவலநிலையை மாற்ற முயலவேண்டும். ஆம்! நாட்டில் காந்தியடிகளும் காமராசரும் தோன்றவேண்டும். அனைவரும் தம்மை மறந்த-நாட்டு வாழ்வை நம் வீட்டு வாழ்வு என்ற உணர்வில் செயல்பட வேண்டும். ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்த வேண்டும்’ என்ற கம்பன் கனவு நனவாக நாமெல்லாம் ஒன்றி உழைக்க வேண்டும். ‘சிந்தனை’ வார ஏடு இந்த ஒன்றிய சிந்தனையை மக்கள் உள்ளங்களில் உருவாக்கி, ‘எல்லாரும் ஓர் நிறை’ என்ற ஒருமை உணர்வினைத் தட்டி எழுப்பி ‘நாடெங்கும்-வாழக் கேடொன்றும் இல்லை’ என்ற கொள்கையினை நிறுவ வேண்டும். அத்தகைய ஆக்க நெறிக்கு அனைவரும் இணைந்து செயலாற்ற ‘இதுவே காலம்-நேரம்-பொழுது’ என்று கண்டு ‘ஒன்றுகூடுங்கள் ஒன்றி உணருங்கள்-ஒன்றிச் செயல்ாற்றுங்கள்’ என்று வேண்டி அமைகின்றேன்.

1985 ‘சிந்தனை’ நூற்றாண்டு மலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/20&oldid=1127264" இலிருந்து மீள்விக்கப்பட்டது