பக்கம்:ஓங்குக உலகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விழாக்கள்

31


வாழ்வார் வேறுபாடற்று, சமுதாய உணர்வோடு ஒன்று கூடி, பசியும் பிணியும் பகையும் நீங்கிய வகையில் மகிழ்ந்து விழாவாற்றுகின்றனறன்றோ?

தமிழ்நாட்டு விழாக்களில் சிறந்த விழாவாகக் கொண்டாடப் பெறுவது பொங்கல் விழாவாகும். இவ்விழாவினைப்பற்றிப் பழைய இலக்கியங்களில் போதுமான சான்றுகள் இன்றேனும் இன்று இது சாதி, சமய வேறுபாடற்ற உழவர் விழாவாக நடைபெறுகின்றது. ஆடியில் இட்ட வித்து ஐப்பசி கார்த்திகையில் அறுவடையாக, கார்த்திகையில் புதுநெல் கொண்டு அவலாக்கி ஆண்டவனுக்குப் படைத்தனர். பின் மார்கழி நோன்பாகவும் தை நீராடலாகவும் தொடர்ந்துவரும் விழாவினை ஒட்டி, தை முதல் நாளைப் பொங்கலாகவும் அதற்கு முன் நாளை உள்மாசும் புறத்தூசும் போக்கும் போகி நாளாகவும், அடுத்த நாளை உழவுக்குதவிய மாடுகளைப் போற்றும் நாளாகவும் அதற்கு அடுத்த நாளை உற்றாரையும் மற்றாரையும் கண்டு மகிழ்ந்து இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் காணும் பொங்கல் விழாவாகவும் தமிழர் இன்று வரையில் போற்றிவருகின்றனர். வடநாட்டிலும் போகியை இந்திர விழாவாகவும் பொங்கலை பகிர்ந்துண்ணும் நாளாகவும் கொண்டாடுகின்றனர். எந்த வேறுபாடும் இன்றி யாவரும் இணைந்து மகிழும் சிறப்பினை இன்றும் ஹோலிவிழாவில் காணமுடிகின்றது.

சில விழாக்கள் விரத நாளாகவும் அமைகின்றன. கார்த்திகை விளக்கீடு உள்ளொளி பெருக்கி, புறஇருள் அகற்றி நிற்பதோடு உண்ணாவிரத நாளாகவும் அமைகின்றது. அப்படியே கெளரி விரதம் போன்றவையும் அமையும். கலைமகள் விழா பத்து நாட்கள் கொண்டாடுவது நாட்டில் கல்வி, கைத்தொழில் போன்றவற்றை வளர்க்கப் பயன்படுகின்றது. சங்க இலக்கியம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/34&oldid=1127294" இலிருந்து மீள்விக்கப்பட்டது