பக்கம்:ஓங்குக உலகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஓங்குக உலகம்


தாகும். இதை விரல் மஞ்சள் என்றும் கூறுவர். இவ்வாறு மனிதனுக்குப் புற உடலின் தன்மையினைக் காப்பதற்கும் அக உடம்பின் மாசுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவதற்கும் மஞ்சள் தொன்றுதொட்டுப் பயன்பட்டு வருகின்றது.

சங்ககால இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகை தொடங்கி எல்லா இலக்கியங்களிலும் மஞ்சள் குறிக்கப்பெறுகின்றது. ‘சிறுபசு மஞ்சளொடு நடுவிரை தெளித்து’ (முருகு 235) முருகனை வழிபட்டதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிக்கிறார். அப்படியே வயலில் அவை அசைந்தாடி வளரும் திறத்தினையும் அழகினையும் சிறுபாணாற்றுப்படை (44), பெரும்பாணாற்றுப் படை (354), போன்றவை குறிக்கின்றன. மதுரைக் காஞ்சியும் (289), பட்டினப்பாலையும் (17), மலைபடுகடாமும் (343), பத்துப்பாட்டில் இம் மஞ்சளின் சிறப்பினையும் அது மக்களால் காக்கப்பெறு பொருளாகப் போற்றப்படுவதையும் குறிக்கின்றன. அப்படியே எட்டுத் தொகையில் நற்றிணையும் (101-1), அகமும் (269-9) இதன் சிறப்பினை விளக்குகின்றன. ‘மஞ்சள் அழகு’ என்றே பதினெண்கீழ்க் கணக்கில் முதலாவதாய நாலடி (131-2) சுட்டுகிறது. காவிரிப் படப்பையில் இந்த மஞ்சள் விளைவதனைச் சிலம்பு சிறப்புறக் காட்டுகிறது ( 0.74-11-82). இவ்வாறு சங்ககாலத்தில் சுட்டப்பட்ட மஞ்சள் பிற்கால இலக்கியங்களிலும் மக்கள் வாழ்வியலிலும் பயின்றுவருதலை மிகுதியாகக் காணலாம். எனினும் விரிவஞ்சி இந்த அளவில் அமைந்து, அதன் தொன்மை உணர்ந்து மேலே செல்லலாம்.

தமிழ்நாட்டில் இந்த மஞ்சள் இல்லாத சடங்கு இல்லையே. எதற்கும் மஞ்சளை முதலாக வைத்தன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/37&oldid=1127552" இலிருந்து மீள்விக்கப்பட்டது