பக்கம்:ஓங்குக உலகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல உள்ளம்

43


அடுத்து, அதையும் தாண்டி, அனைவரும் அனைத்தும் இன்பில் திளைக்கின்றனரா-திளைக்கின்றனவா என்ற நிலை காணும் பொங்கலாக அமைகின்றது. இவ்வாறு மாசு நீங்கிய உள்ளம் காணும் நானிலத்தை வாழ வைக்கும் நல்விழாவாக இந்தப் பொங்கல் விழா அமைகின்றது.

வற்றா வளம் வாய்ந்த பொன்னார் தமிழகத்தில் இந்த ஆண்டில் இயற்கைச் சூழலால் வசியின்றி வளம் சுருங்கினாலும் நல்ல உள்ளங்கள் அதைக் கண்டு நைந்தாலும்-வருங்காலம் வளமாகும் நிலையில் நாம் உள்ளோம் என்பதை மறக்கலாகாது. அடுத்துவரும் பொங்கல் விழா ‘வசியும் வளனும்’ சிறக்கும் விழாவாக அமையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் வாழ்த்துகின்றன. எனவே இடுக்கண் வருங்கால் இனிய முகத்துடன் சிரித்து, வருங்காலத்தில் வையம் வற்றா வளம் பெற வேண்டும் என வாழ்த்தும் நல்ல உள்ளங்கள் நமக்கு வழி காட்டிகளாக அமைய நாம் முன்னேற வேண்டும். முன்னேறுவோம் என்பது உறுதி.

அகத்தும் புறத்தும் மாசகன்ற நல்ல உளத்தொடு நாம் அனைவரும் இந்தப் பொங்கல் நன்னாளில் நாடு ‘வசியும் வளனும் சுரந்து’ ஓங்கவேண்டும் என வாழ்த்துவதுடன் அந்த நல்ல வாழ்வுக்கு அயராது உழைக்கும் ஆக்கப் பணியை மேற்கொள்ள உறுதிபூணுவோமாக! உள்ள உரமும் உடல் உழைப்பும் ஒருங்கே அமையின் நாடு நாடாகும்-நாமும் தலை நிமிர்வோம்! இந்த நல்ல உணர்வோடு-நல்ல உள்ளங்கள் உறவாடும் நிலையில் இப் பொங்கல் விழாவைக் கொண்டாடி புத்துலகப் பொன்வாழ்வை நோக்கி நடப்போமாக! வாழ்க நல்ல உள்ளம்! வளர்க வசியும் வளனும்!

1975 - பொங்கல் மலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/46&oldid=1135788" இலிருந்து மீள்விக்கப்பட்டது