பக்கம்:ஓங்குக உலகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஓங்குக உலகம்



‘தனக்கென வாழாப் பிறர்க்குரியவராக’ வாழ்ந்த திரு.வி.க.வினைப் பலரும் பல கோணங்களில் கண்டு, பழகி, பேசி, எழுதி வருகிறார்கள். அதை எண்ண எனக்குத் திருக்கோவையாரின் பாயிரப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரே நூலாகிய திருக்கோவை யாருக்கு ஒவ்வொருவரும் தத்தம் கொள்கைக்கும் கருத்துக்கும் ஏற்ப உரை கண்டு ஒவ்வொரு நிலையிலும் தத்தம் கொள்கையினைத் தாங்கும் ஒரு நூல் அது என மதிப்பிட்டனர் என்கிறது பாயிரம். இதோ அந்தப் பாடல்

‘ஆரணங் காண் என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண் என்பர் காமுகர் காமநன் நூலதென்பர்
ஏரணங் காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன் புலவோர்
சீரணங் காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே’

என்ற பாடல், மணிவாசகர் தம் திருக்கோவையாரைப் பல கோணங்களில் நம்மைக் காண வைக்கிறது. திரு.வி.கவும் திருக்கோவையார் போன்றவரே. அரசியலில் அனைத்துக் கட்சியாரும் தம்மைச் சேர்ந்தவர் என்றனர். தொழிலாளி தம் துயர் தீர்க்க வந்த தீரர் என்றனர். சைவர்கள் அவரைச் சைவர் என்றனர். பிற சமயத்தவர் தத்தம் மதச் சார்பு உடையவர் என்றனர். பெண்கள் தம் பெருமை பாட வந்தவர் என்றனர். ஏழைகள் தங்களை வாழ வைத்த தெய்வம் என்றனர். அரசர் போன்ற பெருஞ் செல்வர்களும் அவரை நாடி வந்து வணங்கி வாழ்த்தினைப் பெற்றுச் சென்றனர். அறிஞர் புலவர் என்றனர். கவிஞர் நல்ல கவி என்றனர். குழந்தைகள் எங்களுக்குப்புரியும் தமிழில் பேசும் புண்ணியன் என்றனர். சமரச ஞானிகள் எங்கள் தலைவர் என்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/55&oldid=1127353" இலிருந்து மீள்விக்கப்பட்டது