பக்கம்:ஓங்குக உலகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஓங்குக உலகம்


போன்றோர் தம் உதவியுடன்) பள்ளியினைத் திரு.வி.க பெயரால் அமைக்க முடிந்தது. அப்படியே எங்கள் பேட்டையில் அமைந்த ஒரு பெரிய பூங்காவினை, ஒரு சிலர் எதிர்ப்புக்களுக்கு இடையில், ‘திரு.வி.க.’ பூங்கா என அமைக்க முடிந்தது. இப்பூங்கா சென்னை நகராண்மைக் கழக எல்லையில் உள்ளவற்றுள்ளே பெரிய பூங்கா எனச் சொல்லுகின்றனர். அப்படியே எங்கள் எல்லையில் அண்ணாநகர் கிழக்குக் கோடியில் அமைந்த குடியிருப்புக்கு ‘திரு.வி க.’ குடி என்ற பெயர் அமைக்க முடிந்தது. இன்னும் எவ்வளவோ செய்ய ஆசை. ஆனால் தனி மனிதனாகிய என்னால் செய்ய இயலுமோ!

நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் தமிழக அரசினைத் தாழ்ந்து வேண்டிக் கொள்வேன். அவர்தம் நூல்கள் பல கிடைக்கவில்லை; அவற்றைத் தமிழர் தம் பொதுச் சொத்தாக்கி (வேண்டுமானால் உரியவர்களுக்கு உரிய தொகை தந்து) வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் வாழ்ந்த வீட்டினை வாங்கி, நூலகம் அமைத்து, பொதுப் பொருளாகக் காக்க வேண்டும். திரு.வி.க.நகர் அமைத்து, திரு.வி.க. பாலம் அமைத்து, ‘திரு.வி.க.’ பரிசு அமைத்து அவரைப் பாராட்டிய அரசுக்கு இவை பெரிதன்று. இன்னும் எவ்வளவோ பேசவேண்டும் என்ற ஆசை என்னைத் தூண்டுகிறது. எனினும் இப்போது இந்த அளவே போதும் என அமைகிறேன்.

வாழ்க ‘திரு.வி.க.’வின் திருப்புகழ்! வளர்க அவர் காட்டிய தொண்டுநெறி.

திரு.வி.க. நூற்றாண்டு விழா (பேச்சு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/57&oldid=1127362" இலிருந்து மீள்விக்கப்பட்டது