பக்கம்:ஓங்குக உலகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

61


காந்தியடிகள் பற்றியவை யாவும் நூல்களாக வந்தன. அவை இன்று பெற முடியவில்லை. அப்படியே கைம்மை மணம், கலப்பு மணம் போன்ற சமுதாயச் சீர்திருத்தங்கள் பற்றியும் பேசியும் எழுதியும் வந்ததோடு, தாமே பலவற்றை முன்னின்று நடத்திவைத்தார். சில சமயம் அவரைத் தமிழக அரசாங்கம் ‘வீட்டுச் சிறை’ வைத்தது. அப்போதும் மனம் கலங்காது அப்பரைப் போன்று தொண்டே துணையாக வாழ்ந்தார்.

‘நீங்கள் ஏடுகளைப் பயில்வதோடு நில்லாது. ஓய்ந்த நேரங்களில் இயற்கை நிலையங்களில் புகுந்து, இயற்கைக் கழகத்தில் நின்று, இயற்கைக் கல்வி பயில்வீர்களானால், இயற்கையோடியைந்த வாழ்வு நடத்த வல்லராவீர்கள். காடு செறிந்த ஒரு மலை மீதிவர்ந்து, ஒரு மரத்தடியில் நின்று, மண்ணையும் விண்ணையும் நோக்குங்கள்; ஆண்டவன் இயற்கை ஓவியத்தைக் கண்டு மகிழுங்கள். மண் வழங்கும் பரந்த பசுமையிலும், வெண்மையிலும், நீலத்திலும், விண் வழங்கும் நீலத்திலும் தோய்ந்து திளையுங்கள். காலையில் இளஞாயிறு, கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங் காட்சியை நெஞ்சில் எழுதுங்கள். அருவி முழவும், குயில் குரலும், வண்டிசையும், மயிலாலும், மலர் மணமும், தேனினிமையும், தென்றல் வீசலும் புலன்களுக்கு விருந்தாக இயற்கை அன்னையைப் பாருங்கள். ஆங்கே சூழ்ந்துள்ள செடி, கொடி, மரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் உற்று நோக்கி, “சில செடிகள் பூமியிற் பரந்தும், சில செடிகள் எழுந்து நின்றும், சில கொடிகள் நீண்டு நீண்டு மடிந்தும், சில கொடிகள் சுருண்டு சுருண்டு படர்ந்தும், சில மரங்களுக்கு நீள் கிளையும், சில மரங்களுக்கு வீழும், கிளிக்கு வளைந்த மூக்கும், யானைக்குத் துதிக்கையும், மானிற்குக் கொம்பும் அமைந்திருப்பதற்கு என்ன காரணம் என எண்ணுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/64&oldid=1127505" இலிருந்து மீள்விக்கப்பட்டது