பக்கம்:ஓங்குக உலகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

65


‘இருதலைக் கொள்ளி’ எறும்பு என்றால் அந்தக் கொள்ளி பற்றி நிற்கும் இடத்தின் வழி அது தப்பலாம். ஆனால் உள் எறும்பு தப்ப இயலாதே. இதை எண்ணியே மணிவாசகர் ‘உள்’ எறும்பு என்று உவமை காட்டித் தன் நிலையை விளக்குகிறார் என்ற வகையில் பண்டிதமணி அவர்கள் விளக்கங் கூறினார்கள். அப்படியே பொருள் விளங்காத பல திருவாசகத் தொடர்களுக்கு அவர்கள் காட்டிய விளக்கங்கள் அனைவரையும் மகிழச் செய்யும்.

அப்படியே மற்றொரு சமாச மாநாட்டில் ‘ஞானத்தின் திருவுருவை’ என்ற பெரியபுராணப் பாடலின் விளக்கமும் அப்போது அவர்களது தம்மை மறந்த உணர்வு நிலையும் என்னை மறக்கச் செய்தன.

அவர்தம் கதிர்மணி விளக்கம் என்ற திருவாசகத் திருச்சதக உரையிலும், உரைத் தொடக்கம், முன்னுரை முதலியவற்றிலும் அவர்தம் உணர்வும் மொழித்திறனும் சமய ஈடுபாடும் பிற இயல்புகளும் நன்கு விளங்கும். அந்நூலை நான் இன்றும் நாள்தோறும் போற்றிப் பயின்று வருநிலையில் அதன் பெருமையை உணர்கிறேன். சைவ சித்தாந்த சமாசத்திற்கு வந்து தங்குங்கால் பல விடங்களில் இராப்பொழுதில் அவர்களோடு அருகே இருந்திருக்கிறேன். அக்காலத்தில் உறங்குமுன் அவர்கள் திரு. சுந்தர ஓதுவாமூர்த்திகள், தூத்துக்குடி சிவகுருநாதப் பிள்ளை போன்ற பலப்பல பெரியார்களோடு சமய இலக்கியங்களுக்குப் புதுப் புதுவகையான பொருள் காண்பதும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பிள்ளை உள்ளத் தோடு பேசுவதும் இன்றும் என் நினைவில் உள்ளன. ஒருமுறை தூத்துக்குடி மாநாட்டிற்குச் சென்றபோது ஓர் இரவு முழுவதும் அதேபோல் பேசிக் கொண்டிருந்ததில் பொழுது விடிந்ததே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/68&oldid=1127514" இலிருந்து மீள்விக்கப்பட்டது