பக்கம்:ஓங்குக உலகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

என்னை அணைத்து வளர்த்த பச்சையப்பரும் உடன் உள்ளார்.

இந் நூலினை ‘சமுதாயம்’, ‘நாட்டின் நலம் கண்டவர்’, ‘ஆய்வு நெறி’, ‘இலக்கிய்நெறி’ என்று நான்கு பிரிவாகப் பாகுபடுத்தி மொத்தம் இருபத்தைந்து கட்டுரைகளை இதில் இணைத்துள்ளேன். அவற்றுள் முதல் கட்டுரையாக உள்ள ‘ஓங்குக உலகம்’ என்ற பெயரையே இந்த நூலின் பெயராகவும் அமைத்துள்ளேன். கட்டுரைகள் பெரும்பாலும் உலக சமுதாய வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளமையாலும், அத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுத்துச் செயலாற்றியவர் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உள்ளமையாலும், ஒருசில வருங்கால உலகுக்கு வழிகாட்டியாக:-ஓங்க உதவுவனவாக உள்ளமையாலும் ‘இப்பெயர்’ இந்நூலுக்குப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

பொதுவாக உலக நெறியும்-சிறப்பாகத் தமிழ் நெறியும் இக் கட்டுரைகளில் காட்டப் பெறுகின்றன. மொழி தோன்றிய நாள் தொட்டு-மனிதவாழ்வு மலர்ந்த நாள் தொட்டு எல்லா நீதிகளையும் நெறிமுறைகளையும் கற்றும் கேட்டும் மற்றவர்களுக்கு உணர்த்தியும் நின்ற-நிற்கின்ற மனிதன்-எல்லாவ்ற்றையும் கண்டுவிட்டோம் என ஏமாக்கும் மனிதன்-சற்றே நின்று, நினைத்து, சென்ற காலத்தையும் வருங்கால நிலையையும் எண்ணுவானாயின் திருந்த மாட்டானா என்ற உள்ளக் குமுறலோடு ஒருசில கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. வையத்துள் வாழ்வாங்கு வாழ மனிதன் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி-ஆட்சி நெறி-சமுதாய நெறி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ஓங்குக உலகம்’ என்ற பெயர் வழியே வெளிவரும் இந்நூல் ஓரளவாயினும் சமுதாய உயர்வுக்கு-வாழ்வுக்குப் பயன்படும் வகையில் வழிகாட்டியாக அமையும் எனஎண்ணுகிறேன். கற்போர் முடிவு செய்வார்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/8&oldid=1127526" இலிருந்து மீள்விக்கப்பட்டது