பக்கம்:ஓங்குக உலகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஓங்குக உலகம்


நன்கு அறிந்தவர் யாவரும் இவ்வுண்மையை நன்கு உணர்வர். ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்ற தமிழ்விடு தூதின் அடிக்கேற்ப, சிலர் நாட்டில் தமிழால் தம் வாழ்வைப் பெருக்கிக்கொண்டு, வாழ்ந்து மறையும் அதே வேளையில், ‘இருந்தமிழே உனக்காக இருந்தேன்’ என்று தம் வாழ்வைத் தமிழுக்காக ஒப்படைக்கும் நல்லவர்கள் காலத்தை வென்று வாழ்கின்றார்கள். இது அன்றுதொட்டு இன்று வரையில் காணும் வரலாற்று-வாழ்வு நிகழ்ச்சியாகும். இந்த வரிசையில்-மரபில் இன்றை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் சிறக்க இடம் பெறுகிறார்கள்.

தமிழர், தமிழ், தமிழ்நாடு என்று சொன்னாலே தமிழராலேயே வேற்றுப் பார்வையில் பார்க்கப்பெற்ற அந்த நாளிலேயே ‘தமிழ் வாழ்க’ எனப் பட்டிதொட்டிகளிலெல்லாம் முழக்கித் தமிழ் மாணவரினத்தைத் தட்டி எழுப்பித் ‘தமிழினம்’ என்ற தனி இனம் உண்டு என்ற உணர்வை மூட்டி, அத் தமிழினம் உலகில் தலைநிமிர்ந்து வாழத்தக்க வளமும் வரலாறும் பெற்ற ஒன்று என்பதையும் நிறுவி, மக்கள் உள்ளங்களில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களைச் சாரும். அவர்தம் உடன்பிறவாத் தம்பியாய்-அவர் தொட்ட பணிகள் துலங்கும் வகையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட கலைஞர் அவர்தம் தொண்டு போற்றக் கூடியதாகும்.

தமிழ்நாட்டில் பிறந்தவர் தமிழையே அறியாத நிலையில் வேற்றுமொழிகளைக் கட்டாயமாக்கிய அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டக் காலங்களில் எல்லாம் கலைஞர் அவர்கள், அப்போர்களின் முன்னணியில் நின்று வீரம் விளைத்து வெற்றி கண்டவராவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/89&oldid=1127587" இலிருந்து மீள்விக்கப்பட்டது