பக்கம்:ஓங்குக உலகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஓங்குக உலகம்



எழுத்தில் மட்டுமன்றிக் கலைஞர்தம் செயலிலும் தமிழ் நலம் தெளிவாகும். ஓடும் உந்து வண்டிகள் எல்லாம், திருக்குறளை மக்களுக்கு விளக்கிக்கொண்டே இருக்கின்றனவன்றோ? எத்தனையோ ஊர்ப்பெயர்கள் உண்மையான நல்ல தமிழ்ப்பெயரைப் பெற்றுத் திகழ்கின்றன. பாரதியார் கண்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இந்நாட்டுக்கு இவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே பெற வாய்ப்பு உண்டாயிற்று.

“தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா”

என்ற பாரதியின் வாக்கை வாழவைத்த பெருமையோடு, அத் தமிழ்த்தாய் வணக்கத்தையே தெய்வ வணக்கமாக்கிய பெருமையும் இவர்கட்கு உண்டன்றோ? வள்ளுவர் கோட்டம் கண்டு அவர் புகழ் பரப்ப வழி வகுத்தது — பூம்புகார் கண்டு தமிழர் பழைமையைக் காத்தது — இவை போற்றப்பட வேண்டியவை.

அலுவலகங்களிலும் ஆவணங்களிலும் பிற இடங்களிலும் நல்ல தமிழ்-நாட்டுமொழி-மக்கள் உணரும் மொழி இடம்பெறச் செய்த பெருமை கலைஞரையே சாரும் என்பது தெளிவு. பெயர் விளங்காப் பல ஊர்களின் பெயர்கள் தற்போது தெளிவுற்றுத் தம் பெயர்களை விளக்கிக் கொண்டுள்ளன. எங்கு நோக்கினும் நல்ல தமிழைத் தாங்கிக்கொண்டு பெயர்ப் பலகைகளும் விளம்பரங்களும் காட்சி அளிப்பதைக் கண்டு தமிழ் உள்ளம் களிதுளும்புகின்றது இவ்வாறு தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் என்பதைச் செயலில் கொண்டு வந்து, அத் தமிழை வாழவைத்த நல்ல ஆட்சிக்குத் தலைவராக உள்ள கலைஞர் அவர்கள் ‘நீடு வாழ்க’ என வாழ்த்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/91&oldid=1135819" இலிருந்து மீள்விக்கப்பட்டது