பக்கம்:ஓங்குக உலகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஓங்குக உலகம்


பின் அதன் தொடக்கவிழா, கட்டடக் கால்கோள், திறப்புவிழா ஆகியவற்றில் கலந்து சிறப்பித்தனர். அந்தப் பள்ளிக்குக் கட்ட இருபத்தையாயிரம் குறைய, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரு நாடகங்கள் நடத்தி முழுவசூலையும் தந்து உதவினார்கள். எல்லா விழாக்களிலும் இருவருமே கலந்துகொள்வர்.

நான் சென்னைப் பச்சையப்பரில் பணி ஏற்றபின் அடிக்கடி அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைக் காண்பேன். எப்போதும் இன்முகத்தோடு வரவேற்று, வேண்டிய மக்கள் நலத் தொண்டுகள் நடைபெற உதவுவார். நான் என் தேர்தல் வெற்றிக்குப் பின் எந்தக் கட்சிகளுடனும் தொடர்புகொள்ளாது தமிழ்ப்பணி செய்வது ஒன்றனையே கடனாகக் கொண்டேன் (கருத்தரங்கக் கட்டுரைகள்-ம.கி. தசரதன்). உடன் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றினேன்.

1955ல் திரு.வி.க. மறைவிற்குப் பிறகு ஷெனாய் நகரில் நான் செயலாளனாக இருந்து ஒரு பள்ளி தொடங்க முயன்று வெற்றி கண்டு, அதற்குத் திரு.வி.க. உயர்நிலைப்பள்ளி என்றே பெயரிட்டேன். அதற்கு டாக்டர் மு.வ. அவர்களும், டாக்டர் சுந்தரவதனம் அவர்களும் பெரிதும் உதவினர். அதற்குரிய நிலம்பெற (சுமார் 8 ஏக்கர்) திரு பக்தவத்சலம் அவர்கள் நகராண்மைக் கழக ஆணையருக்குச் சொல்லி உதவினர். பின் பள்ளித் திறப்பு விழாவின்போது அவர்களும் பெருந்தலைவர் காமராசரும் அன்றைய கல்வி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் ஒருசேர வந்து கலந்து வாழ்த்தினர். இன்று அத் ‘திரு.வி.க.’ பள்ளி சிறக்க வளர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர-ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/95&oldid=1127595" இலிருந்து மீள்விக்கப்பட்டது