பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

‘சிவகாமி, உன் பாக்கியம் தான். கனகனேரிப் பண்ணையார் வீட்டிலே சம்பந்தம் பண்ணுகிறதென்றால்............’

‘அவருக்கு மகன் கிடையாதே!' என்று நினைத்தது நெஞ்சு. சொல்லத் துணியவில்லை அவள்.

‘அவராக வலிய வந்து கேட்பது என்றால்......'

அவள் இதயத்திலே யாரோ ஊசியால் குத்துவது போலிருந்தது. கவனித்தாள்.

‘நல்ல மனுஷன், வயசு என்ன பிரமாதமாகவா ஆகிவிட்டது! முப்பத்துமூணோ என்னவோ தான்...'

தங்தை தன் பேச்சை முடிக்கவில்லை. ஆனால், இன்னும் பதினேழு வயது முடியாத அவள் பெருமூச்செறிந்தாள். இன்பக் கனவுகள் கிளுகிளுத்த அவளது பிஞ்சு இதயத்தை விஷப் பாம்பு கடித்தது போல-கடித்தும், விடாமல் கவ்விக்கொண்டிருப்பது போல, வலித்தது அவளுக்கு.

அவள் கனவு கண்டாள். எல்லாப் பெண்களையும் போல, பெண்களைப் பற்றி ஏங்குகிற எல்லா ஆண்களையும் போல, பருவ மங்கை அவள் எண்ணினாள், மனசுக்குப் பிடித்த மன்மதனுக்கு மாலையிடலாம் என்று.

இன்றைய சமூக தர்மத்தின்படி, மணமாக வேண்டிய மங்கைமார்களுக்கு எல்லாம் மன்மதர்களே மாப்பிள்ளையாகக் கிடைக்க இடம் உண்டா, அப்படி தப்பித் தவறிக் கிடைத்தாலும் அவன் மனசுக்குப் பிடித்தவனாக, மனைவியை அன்பாக, இன்பத் துணைவியாக. மதித்து நடத்துகிறவனாக இருப்பானா?-இது போன்ற விஷயங்களை அவள் எண்ணிப்பார்க்கவில்லை.