பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வில்லை! பணபலத்தைக் கொண்டு. மலர்ந்து சோபித்து காலத்தென்றலின் இன்ப ஸ்பரிசத்துக்காகக் காத்திருக்க அழகு மலரை, கொள்ளையடித்து விட்ட கோரம் அது. ‘அதற்கு’ வயது நாற்பது. சிவகாமிக்கு வயது பதினேழு, அவனுக்கு அவள் மூன்றாம் தாரம்

‘தாவாச் சிறுமான்’ சிவகாமிக்கு கிழடு தட்டிய கணவனைப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்?

பணத்தோடு பணம் சேர்ந்தது என்று சம்பந்தம் செய்த பெருமையில் திளைத்திருந்தார் தந்தை, ஆனால் மகளுக்குத் தான் மனநிறைவு இல்லை!

பண்ணையாரின் மனைவியாகி விட்ட சிவகாமிக்கு நகைகள் கிடைத்தன, பட்டுச்சேலைகள் கிடைத்தன ராஜ மரியாதை, சுக வாழ்வு எல்லாம் இருந்தன. ஆனால் உள்ளத்தில் திருப்தி இல்லை.

என்ன ஆடம்பர சாதனங்கள் கிடைத்துத்தான் என்ன செய்ய! உண்மையான இன்பம்-அவள் கனவு கண்ட வாழ்வின் பலன், மண வாழ்வின் திருப்தி, மன மலர்ச்சி-கிட்ட வழியில்லை.

எப்படிக் கிட்டும்? இன்றைய சமூக திருப்திப்படி பெரியவர்களால் வியாபார ரீதியிலே நடத்தி வைக்கப்படுகிற எந்தக் கல்யாணத்திலேதான் பெண்ணுக்கு இன்பம் கிடைக்க வழியிருக்கிறது? ஆணுக்குத்தான் இன்பமும் அமைதியும் கிட்டிவிடுகிறதா என்ன!

அதைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் பெண். எல்லாப் பெண்களையும் போல, தன்னைப் பற்றியே தான் அவள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.