பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கதையைப் பற்றி

ஒடிப்போனவள் கதை அமானுஷ்யமான கற்பனையல்ல. ராக்ஷஸக் கதையும் அல்ல. அன்றாடவாழ்விலே அல்லலுறுகிற எத்தனையோ அபாக்கியவதிகளில் ஒருத்திதான் சிவகாமியும். அவளை-அவளைப்போன்றவர்களை ஏசி வசைபாடத்தான் தெரியும் சமூக மக்களுக்கு.

அடிப்படைக் காரணமே, சம்பிர தாயக் குட்டையிலே ஊறிக் கிடக்கும் அட்டைகளான சமூகப் பெரியார்களே என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.

இன்றைய சமுதாயம் கரையான் புற்று. இடிந்து கொண்டிருக்கும் பாழ் வீடு. மேலே மினுமினுப்பான குழிதாமரையும், நீலோற்பலமும் தாமரை மலர்களும் மினுக்க ஆழத்திலே பாசியும் புழுக்களும் முட்களும் நிறைந்து சாக்கடையாக மாறி வருகிற தேக்க நிலை.

சமுதாயம் சீர்திருந்த வேண்டும் என்கிறார்கள். சமுதாயம் சீர்திருந்த முடியாது, சமூக தர்மங்களும், மூட நம்பிக்கைகளும், மக்களின் மடத்தனமும் அவற்றால் விளைகின்ற தீமைகளும் ஒழித்துக் கட்டப்படும் வரை.

‘பாபங்கள்’ என்று மதிக்கப்படுகிற அநேகம் செயல்கள் ‘இல்லாக் குறை’யினால் எழுந்தது என்று எண்ணி ஏமாறுகிறார்கள். ‘இருக்கின்ற திமிர்’ காரணமாகவும் பாபங்கள் கொழுத்து வளரும் என்பதை உணர முடியாதவர்கள் பிரச்னையை ‘ஒண்ணரைக்கண்’ பார்வையோடு தான்பார்க்கிறார்கள்என்று கூறுவேன்.