பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வந்த ஆள் வாசலிலேயே நின்றதைக் கண்டதும் ஐயருக்கு விஷயம் விளங்கிவிட்டது. உடனே முகம் கோணியது. திரும்பியபடி, “யாரும் அப்படி இங்கே இல்லேப்பா ... போ...ஜல்தி !" என்று பதட்டத்துடன் மொழிந்தார். ரேடியோவை ட்யூன் பண்ணினார்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம் !"

என்று பாடியது ரேடியோ.

அலுப்புக்கொண்டு தலையை வடபுறம் திருப்பினார்.

அங்கே, தேசத்தலைவர்கள் விஷமப் புன்னகையை வேதனையுடன் சிந்தியபடி காட்சி தந்தார்கள்.

இப்போது அதிபருக்கு மனத்தை என்னவோ செய்தது. திரும்பிப் பார்த்தார். வந்த ஏழை இன்னமும் தயங்கி நின்றான். ஒரு பொட்டலம் பக்கோடாவை எடுத்து அவன் கை தொட்டுக் கொடுத்து, உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து ஸ்டுலில் குந்தச் செய்து காப்பியும் கொடுத்து அனுப்பினார். காணாமற் போன அந்த ஏழையின் குமாரனின் விவரங்களையும் முன்போலவே வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

அப்போது ஐயர் நிம்மதியாகப் பெருமூச்சு விடலானார்.

முதற் பந்தி முடிந்தது.

ஐயர் எட்டிப் பார்த்தார்.

எச்சில் இலைகள் அப்படி அப்படியே இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/35&oldid=1163128" இலிருந்து மீள்விக்கப்பட்டது