பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


உமைபாலன் வெளியே தன் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தான்.

இன்னமும் பிரித்தார் பெரியவர். சிகரட்டுகள் சில கிடந்தன. கிழிக்கப்பட்டு பெட்டிக்கடியில் போடப்பட்டிருந்த நோட்டுத் தாள்களை எடுத்த போது, ஒன்றில் "எஸ். காத்தான்” என்ற பெயர் இருந்தது. 'காத்தான்!'....

சடக்கென்று ஐயர் குடுமியைத் தட்டி முடிந்தார். 'சாம்பான் கிழவன் சொன்ன பேர் காத்தான் என்பதுதானே!.... ஒரு வேளை, இவன் அவனோட மகனாயிருக்குமோ? ... பேரையும் ஜாதியையும் மாற்றிக்கிட்டு வேஷம் போட்டிருப்பானோ? சே!,எனக்கு மண்டைன்னா கனக்குது !... பாவம், அப்துல்லாதான் நல்ல பையன். எதையும் மறைக்கலே !....

'கனபாடி' கிளம்பினார்.

அப்துல்லாவுக்குப் புதிதாகப் போட்ட ஜாங்கிரியை எடுத்துக் கொடுத்தார். இதைத் தூரத்தேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் உமைபாலன் என்பதை உணர்ந்து, இன்னொரு ஜாங்கிரியை எடுத்து அவனை நெருங்கி அவனிடம் கொடுத்தார்.

உமைபாலன் “இது வேண்டாமுங்க! உங்க அன்புதானுங்க வேணும்!” என்று சொல்லிவிட்டான்.

“இவனைப் படிக்கிறதுக்கு எனக்கு வயசு பத்தாது போல!” என்று எண்ணமிட்டார் கங்காதரம்.

அவரவர்கள் பலகாரங்களை உண்டனர்.

கடிகாரமோ காலத்தை உண்டது.

வெயில் எரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/47&oldid=1282414" இலிருந்து மீள்விக்கப்பட்டது