உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

67

கையேந்தித் துண்டேந்தி வாங்கிச் சேர்த்த காசுகளாலே, நாமெல்லாம் ஒருவர் கருத்துகளை ஒருவர் பரிமாறிக் கொள்ளுகிற தேவையிலே இக்கூட்டம் கூட்டப் பெற்றிருக்கிறது.

எங்கள் முயற்சிகளுக்குத் துணை நில்லுங்கள்

பெரியோர்களே! இது எதற்காகவோ, பதவிக்காகவோ, ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ நாங்கள் முயற்சி செய்யவில்லை; இம்மாநாட்டைக் கூட்டவில்லை. அந்த நோக்கம் எங்களுக்கு அறவே கிடையாது. மக்களுக்கு உண்மையான கருத்து விளக்கங்களைத் தர வேண்டும்; அவர்கள் உண்மையான அறிவு பெறுவதற்குத் துணையாக இருக்கவேண்டும். அவர்கள் ஒரு காலக் கட்டத்திலே எழுச்சி பெற்று. இந்த இன மக்களின் வலிவை எதிரிகளுக்குக் காட்டவேண்டும். அந்த வகையிலே இந்த இனத்தை மேம்பாடு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு சில முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

சான்றோர்களே, பெரியோர்களே, உண்மையான வணிக உள்ளங்களே, வள்ளல் நெஞ்சங்களே! தமிழர்களே! நீங்கள் எல்லாம் இந்தக் கருத்துகளுக்கு இந்த முயற்சிகளுக்கு, என்றென்றும் துணை நிற்கவேண்டும் . இந்த முயற்சிகளை வரவேற்க வேண்டும். வாழ்த்த வேண்டும். ஆதரவு தரவேண்டும். வாழ்விக்க வேண்டும். இந்த இனம் தன்னுடைய பழைய வலிவு பெறுவதற்கு, பழைய பெருமையைப் பெறுவதற்கு, உண்மையான தமிழினமாக மலர்ச்சியுறுவதற்கு நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு, இந்த நீண்ட நெடுநேரம் காத்திருந்து, இம்மாநாட்டைச் சிறப்புற நடத்திக் கொடுத்த உங்களுக்கு. இந்தக் கழகத்தின் முதல் தொண்டன் என்கிற வகையிலே என்னுடைய நெஞ்சு நிறைந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/77&oldid=1163479" இலிருந்து மீள்விக்கப்பட்டது