68
ஓ ! ஓ ! தமிழர்களே !
தமிழ இனமே! தமிழ இனமே!
கமழக் கமழக் கழகக் காலத்து
ஒங்கிய வாழ்க்கை தாங்கியிருந்து,
நீங்குதல் அறியா அடிமை நிலைபெறத்
தாழ்ந்து கிடக்கும் தமிழ இனமே!
வாழ்ந்து கிடந்த வரலாற்றைப் புதுக்குவாய்!
உனைவிழிப் பிக்கவும் உனைவாழ் விக்கவும்
உனையில் வுலகத்துள் உரிமை இனமெனப்
பட்டயங் கட்டிப் பழம்புகழ் மீட்கவும்,
கொட்டிய முரசம் எத்தனை தெரியுமா? 10
கூக்குரலிட்டவர் எவர் எவர் அறிவையா?
ஏக்கமுற் றுன்னை எழுக எழுகென
எழுதிக் குவித்த கைகள் எத்தனை?
தொழுது வேண்டிய வாய்கள் எத்தனை?
தோளை உலுக்கித் தூக்கி நிறுத்தி
வாளைச் சுழற்றடா என்றுனை வாழ்த்திய
பாட்டின் வேந்தன் பாரதி தாசற்கு
நீட்டி முழக்கி விழா நிகழ்த் தினையே!
என்ன பொருளில் இவ்விழா வெடுத்தாய்?
சொன்னவன் பாட்டின் சொற்பொருள் என்ன20.
என்ன சொன்னான்: எவர்க்கவன் சொன்னான்?
இன்ன விளக்கங்கள் எல்லாம் அறிவையா?
குட்டக் குட்ட்க் குனிந்து கொடுக்கும்
முட்டாள் தமிழனே மூடப்பிறவியே
ஒன்று கேள்: நீயோர் ஊமைய னல்லன்:
தொன்றுதொட் டடிமைத் தொழும்பனு மல்லன்
அன்றுன் தமிழ்க் கொடி பனிமலை ஆண்டது!
இன்றுன் தமிழ்த்தலை இந்திக்குத் தாழ்ந்தது: