பெருஞ்சித்திரனார்
75
இலங்கையில் தமிழ மக்கள்
எத்தனை யோ, நூற் றாண்டாய்
விலங்குக ளோடும், தீய்க்கும்
வெயிலொடும் குளிரினோடும்
கலங்கிய கண்ணீ ரோடும்
கடுமையாய் உழைத்து ழைத்துப்
புலங்களைத் திருத்தி னார்கள்!
புதுப்புலம் விளைவித் தார்கள்! 1
காடுகள் அழித்து நல்ல
கழனிகள் தோற்று வித்தார்!
மேடுகள் குழிகள் எல்லாம்
சமநிலை மேவச் செய்தார்!
மாடுகள் போலு ழைத்தும்,
மண்வளம் பெருக்கி வாழ்ந்தும்,
நாடுகள் அற்ற-வாழ்க்கை
நலமற்ற-குடிக ளானார்! 2
நினைக்கையில் உயிரும் நெஞ்சும்
நெருப்பாகிக் கனலும்! நல்ல
பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்;
பயன்தினை யின்றிப் போனார்!
வினைக்கவர் உரியர் என்றால்,
விளைவுக்கும் உரியர்; ஆனால்,
மனைக்கொரு நிலமும் இன்றி
அடிமையாய் மாள்கின் றாரே! 3
கல்விக்கங் குரிமை யில்லை;
சிங்களம் கற்றல் வேண்டும்! .
செல்வத்தைச் செய்வா ரேனும்
செழிப்புள்ள வாழ்க்கை யில்லை!
பல்வளம் பெருக்கு கின்ற
பாட்டாளி மக்க ளேனும்
நல்வள வாய்ப்பு மின்றி,
நலிவோடு வாழ்த லுற்றார்! 4