vii
படை மெய்ம்மம் (தத்துவம்) ஆகும் என்பதை எண்ணி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்
நாம் ஒவ்வொருவரும் அம்மரத்தின் தனித் தனிப்பயன்களைப் போல், தனித்தனியான வகைகளில் சிறப்புற்றவர்களாக இருக்கலாம். நம்மில் கிளைகளாக விரிந்திருப்பவர்கள் பலர்; இலைகளாகப் பரத்திருப்பவர்கள், பலர்; மலர்களாக மலர்ந்திருப்பவர்கள், பலர்; அவற்றுள் பிஞ்சுகளாகக் காய்களாகப் பழங்களாகப் படிநிலை (பரிணாம) வளர்ச்சி பெற்றிருப்பவர்களும் பலராக இருக்கலாம். இவ்வெடுத்துக்காட்டுள், கிளைகள் நம் தனித் தனித் தொழில் பிரிவுகளாகவும், குலப் பிரிவுகளாகவும் இருக்கட்டும். இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களும் . நம் தனித் தனியான முன்னேற்றங்களாகவும் இருக்கட்டும். ஆனால் நாம் இணைந்தும், பிணைந்தும் உறுப்புகளாகி நிற்கின்ற அடிமரமாகிய இனத்தையும், அது வேரூன்றி நிற்கும் நிலமாகிய நம் நாட்டையும் பற்றி - நாம் கவனியாமலும் கவலைப்படாமலும் இருத்தல் முடியுமா - என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவற்றுக்கு வந்திருக்கும் ஊறுபாட்டையும் மாறுபாட்டையும் நாம் அறிந்து கொண்டு, நன்கு உணர்ந்து கொண்டு, நமக்கொரு தீர்வை, நம்மளவில் செய்யவில்லையானால், விளைவு என்ன ஆகும்? நம் எதிர் காலத்தில் நாம் எங்கே இருப்போம்? இனி, நம்மை அடுத்துவரும் படிப்படியான பருவக் காலங்களில், நம்மிடையில் தோன்றும் பூக்களுக்கும் பிஞ்சுகளுக்கும், காய்களுக்கும், கனிகளுக்கும், மலர்ச்சி வாய்ப்பும், வளர்ச்சி வாய்ப்பும் பயன்பேறும் எவ்வகையில் கிட்டும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டாமா? -