பக்கம்:ஓ மனிதா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயில் கேட்கிறது

27

அபயம் அளித்த அய்யன், வள்ளுவராகப் பூலோகத்தில் அவதரித்து ‘இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் அதிலே துறவறத்தின் பெருமையையும் காணலாம்’ என்பதைத் தாம் எழுதிய குறளால் மட்டும் அல்ல, வாழ்க்கையாலும் வாழ்ந்து காட்டினாராம். அதற்கு மேல் தான் பூலோகத்திலுள்ள பெண்களும் பிழைத்தார்களாம், பிரம்மாவும் பிழைத்தாராம்!

ஓ, மனிதா! எதற்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையை மீறிப் போனால் இப்படி ஏதாவது ஒரு விபரீதம் நடக்கத்தான் நடக்கும். இந்த நிலைக்குப் பெண்கள் தான் தங்களை அறியாமல் உன்னை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா அவர்களைப் பின்பற்றிப் பிளவுஸ் துணியில் சிலாக்கும், புடவைத் துணியில் லுங்கியும் கட்டிக்கொண்டு திரிவது?

அழகு என்பது ஒரு கலைதான்! அதை வளர்க்க வேண்டியதும் அவசியம்தான். ஆனால் அது மனத்துக்குச் சாந்தி அளிப்பதாய் இருக்க வேண்டுமே தவிர வெறி ஊட்டுவதாக இருக்கக் கூடாது.

‘சாந்தி வேண்டாம், வெறிதான் வேண்டும்’ என்று நினைத்தால் அந்த வெறி வெறுப்பாகி, வெறுப்பு உன்னைத் துறவியாக்கி, மீண்டும் ஒரு வள்ளுவர் வந்து அல்லவா இங்கே அவதரிக்க வேண்டியிருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/28&oldid=1370295" இலிருந்து மீள்விக்கப்பட்டது