பக்கம்:ஓ மனிதா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. குரங்கு கேட்கிறது

‘மனம் ஒரு குரங்கு’ என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கென்றே ‘டார்வின் சித்தாந்தம்’ என்று ஒரு தனிச் சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு பெருமையாகக்கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் ‘பகுத்தறிவு’ எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

ராம-ராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன கடவுளரைக் குறிக்கும் விக்கிரகங்களை வேண்டுமானால் நீங்கள் ‘நைவேத்தியம்’ என்ற பேரால் பழம்—பட்சணம் வைத்து வணங்குவீர்கள்— அவற்றை எடுத்து அவை தின்றுவிடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ?— ‘ராம ராமா!’ என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/29&oldid=1370297" இலிருந்து மீள்விக்கப்பட்டது