பக்கம்:ஓ மனிதா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. கொக்கு கேட்கிறது

ன்னை வைத்துத்தான் உங்களிடையே எத்தனை கதைகள்!—கதை என்றால் ‘கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவரே?’ என்று வள்ளுவரின் மனைவியான வாசுகியம்மாள், விரைந்து வந்து பிச்சையிடவில்லை என்பதற்காகத் தன்னை வெகுண்டு நோக்கிய கொங்கணவ முனிவரைக் கேட்டதாக ஒரு கதை இருக்கிறதே அந்தக் கதையை நான் சொல்லவில்லை; அது தன் மனைவியை நம்பாத யாரோ ஓர் அசட்டுக் கணவனால் ‘ஒரு பெண் கற்புக்கரசியாயிருந்தால், அவளுக்கு முக்காலத்தையும் உணரக் கூடிய ஞானம்கூட உண்டாகும்’ என்பதைக் கருவாகக் கொண்டு கட்டி விடப்பட்ட கதையாயிருக்கலாம். அதை விடுங்கள்; இந்தக் காலத்தில் தான், மரத்தடி ஜோசியரிலிருந்து கையில் ‘மந்திரக் கோல்’ என்று ஏதோ ஒரு கோலை வைத்துக்கொண்டு தெருத் தெருவாய் அலையும் ஜோசியக்காரிகள் வரை எல்லோருமே முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகளாயிருந்து வருகிறார்களே!

விஷயம் என்ன வென்றால், உங்களில் யாரோ ஒருவன் என்னை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்திருக்கிறான். அப்படித்தான் கவனித்தானே, என் பெருமைகளில் வேறு ஏதாவது ஒன்று அவன் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடாதா? அதுதான் இல்லை; போயும் போயும் என்னுடைய மூக்கு அவன் கவனத்தை கவர்ந்திருக்கிறது. அதை வைத்து அவன் உடனே ஒரு கதை கட்டி விட்டு விட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/33&oldid=1370734" இலிருந்து மீள்விக்கப்பட்டது