பக்கம்:ஓ மனிதா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொக்கு கேட்கிறது

35

ஓர் ஊரிலே ஒரு நரியாம்— ‘நரி ஊரிலே எப்படி இருக்கும்?’ என்று என்னைக் கேட்காதீர்கள்—அவன் காட்டிலே நரியைப் பார்த்திருக்கமாட்டான் போலிருக்கிறது! — அந்த நரி ஒரு நாள் எதையோ தின்னப் போய் எலும்புத் துண்டு ஒன்று அதன் தொண்டையிலே சிக்கிக் கொண்டுவிட்டதாம். அதை வெளியே கொண்டு வர நரி எத்தனையோ வகையில் முயன்று பார்த்ததாம்; எல்லாம் வீண். கடைசியில் அது என்னைத் தேடி வந்ததாம்- நரி கொக்கைத் தேடி வந்தால் கொக்கு அதற்கு எதிர்த்தாற்போலேயா நின்று கொண்டிருக்கும்?’ என்று உங்களிடையே உள்ள சில ‘பகுத்தறிவுச் சிங்கங்கள்’ கேட்கலாம். ‘இது கதை ஐயா, கதை!’ என்று அவர்களிடம் சொல்லுங்கள்—‘கொக்காரே, கொக்காரே! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?’ என்று முக்கி முனகிக் கொண்டே கேட்டதாம் நரி. ‘என்ன உதவி?’ என்று கேட்டதாம் கொக்கு. என் தொண்டையில் ஓர் எலும்பு சிக்கிக் கொண்டு விட்டது. அதை உங்களுடைய மூக்கால் தயவு செய்து எடுத்து விடுங்கள், உங்களுக்கு நான் ஒரு பெரிய மீனைப் பரிசாகக் கொண்டு வந்து தருகிறேன்' என்றதாம் நரி. ‘சரி, வாயைத் திற’ என்று கொக்கு சொல்ல, நரி வாயைத் திறக்க, அப்போது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியோ, ஏஜெண்டோ இல்லாததால் கொக்கு தன் மூக்கை ‘இன்ஷ்யூர்’ செய்யாமலே நரியின் வாய்க்குள் துணிந்து விட்டு எலும்பை எடுத்துவிட்டு, ‘எங்கே பரிசு?’ என்று கேட்டதாம். ‘முட்டாள் கொக்கே, என் வாய்க்குள் நீ மூக்கை விடும் போது அதை நான் கடிக்காமல் விட்டேனே, அதுதான் உனக்கு நான் தந்த பரிசு!’ என்று சொல்லிவிட்டு நரி எடுத்ததாம் ஓட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/36&oldid=1370743" இலிருந்து மீள்விக்கப்பட்டது