பக்கம்:ஓ மனிதா.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு கேட்கிறது

43

இதிலிருந்தே உங்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்பது மக்களுக்கு புரிந்துவிடுகிறது. அதனால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் இயக்கமும் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.

என்னை விடுங்கள். ஒருகாலத்தில் தெய்வத்தின் பேரால் இந்த நாட்டில் எத்தனையோ யாகங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த யாகங்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் பலியிடப்பட்டு வந்தன. அந்த யாகங்களிலிருந்து ஆட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்த புத்தர் என்ன செய்தார்?— ஆட்டின் கழுத்தை நோக்கி வந்த கத்திக்குக் கீழே தன் கழுத்தை நீட்டினார். அதனால் என்ன நடந்தது?—ஆடும் பிழைத்தது; அவரோடு அவருடைய தருமமும் பிழைத்தது.

அந்த மகானைப் பின்பற்றி உங்களில் எத்தனை பேர் இன்று மாட்டிக்கும் தொட்டிக்கு வந்து, எங்கள் கழுத்தை நோக்கி வரும் கத்திக்குக் கீழே உங்கள் கழுத்தை நீட்டத் தயாராயிருக்கிறீர்கள்?

ஒன்று, இரண்டு, மூன்று....

எங்கே, நான் எண்ணியதுதான் மிச்சம்; உங்களில் ஒருவர் கூட ‘ம்’ என்று சொல்லமாட்டேன் என்கிறீர்களே!

மாட்டிடம் கருணை காட்டாவிட்டால் போகட்டும்; உங்களைப் போன்ற மனிதர்களிடங்கூட நீங்கள் கருணை காட்டாவிட்டால் போகட்டும்; உங்களைப் பெற்று வளர்த்து, எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் உங்களை ஆளாக்கிவிட்ட உங்கள் தாய், தந்தையரிடமாவது நீங்கள் கருணை காட்டுகிறீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/44&oldid=1370772" இருந்து மீள்விக்கப்பட்டது