பக்கம்:ஓ மனிதா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆந்தை கேட்கிறது

53

என்று உடனே கையைக் கழுவிக்கொண்டு விடுகிறீர்கள்’ பாலுக்கும் தண்ணீருக்குமோ இப்போது பேதமே இருப்பதில்லை; இரண்டும் ஒன்றாகிவிட்டன. மோரில் வெண்ணெய் என்று ஒன்று திட்டுத் திட்டாக, மிதக்குமே அதைப் பாலாக இருக்கும்போதே இயந்திர உதவி கொண்டு எடுத்து நல்ல விலைக்கு விற்றுவிடுகிறீர்கள். வெண்ணெய் எடுத்த பாலையும் நீங்கள் சும்மா விடுவதில்லை; அதையும் தயிராகவும் மோராகவும் ஆக்கி, ஏமாந்தவர்கள் தலைகளிலெல்லாம் கட்டி விடுகிறீர்கள். திருடர்களைப் பற்றியோ பேசக் கூடாது—முன்னெல்லாம் சைக்கிளை வெளியே விட்டு வைக்கமுடியாமல் இருந்தது; இப்போதோ காரையே வெளியே விட்டு வைக்க முடியவில்லை.

ஆகா! என்ன முன்னேற்றம், என்ன முன்னேற்றம்!

‘எல்லாம் நானே!’ என்றான் சாட்சாத் கண்ணபிரான். ‘அவனுக்கு நாங்கள் ஒன்றும் தோற்றவர்கள் அல்ல’ என்பதுபோல் நீங்களும் எல்லாமாக இருக்கிறீர்கள். திருடனும் நீங்களே; திருடனைப் பிடிக்கும் போலீஸ்காரனும் நீங்களே. தண்டனை வழங்கும் நீதிபதியும் நீங்களே; அந்தத் தண்டனையை அனுபவிக்கும் கைதியும் நீங்களே.

உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதால்தானோ என்னவோ, எடுத்ததற்கெல்லாம் சட்டத்தை நம்புகிறீர்கள், அந்தச் சட்டங்களை உருவாக்குபவர்களும் நீங்களே; உடைத்தெறிபவர்களும் நீங்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/54&oldid=1370794" இலிருந்து மீள்விக்கப்பட்டது